தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் மதில் மேல் பூனையாக இருக்கிறது

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மதில் மேல் பூனையாக இருக்கின்றது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் நவரெட்ணராஜா தெரிவித்தார். கிழக்கில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற சரித்திரத்தை ஏற்படுத்தப்போகின்றோமா? அல்லது கிழக்கில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற நிலையை ஏற்படுத்தப்போகின்றோமா? என்பதை மக்கள் தீர்மானிக்கும் சந்தர்ப்பம் இது என குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்றில் நேற்றுமுன்தினம் (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கு தமிழர்களை பொறுத்த வரையில் அவர்களின் சிந்தனைகளும் அரசியல் சமூக பொருளாதார நிலைப்பாடுகளும் வேறு. ஆனால் கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அவை பார்க்கப்படவேண்டி உள்ளது.

கடந்த கால நல்லாட்சி எமது மக்களை எவ்வாறு சின்னாபின்னமாக்கியுள்ளது என்பதை ஆராய்ந்து ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவை ஆதரித்து செயற்பட வேண்டிய கட்டயாத்தில் நாம் இருக்கின்றோம் என கூறினார்.

1948 இல் இந்த நாடு சுதந்திரம் அடைந்தபோது கிழக்கில் தமிழர்களுடைய பரம்பல் 80 வீதமாக காணப்பட்டது. 2000 ஆம் ஆண்டு புள்ளிவிபரக் கணக்கெடுப்பின் போது அது 38 வீதமாக குறைவடைந்ததை கண்டோம் என்றார்.

இன்னும் ஒரு பதினைந்து வருடங்களில் பின்னர் அத்தொகை எந்தளவிற்கு குறைவடையும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தற்போதைய எமது நிலப்பரப்பு 34 வீதமாக இருக்கின்றபோது மக்கள் 38 வீதமாக காணப்படுகின்றனர். இவற்றை பார்க்கும்போது எமது மக்கள் மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை உணர முடிகின்றது என்றார்.

கிழக்கில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற சரித்திரத்தை ஏற்படுத்தப்போகின்றோமா? அல்லது கிழக்கில் தமிழர்கள் வாழ்கின்றான் என்ற நிலையை ஏற்படுத்தப்போகின்றோமா? எனும் இரு பிரதான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் நாம் சரியான முடிவெடுத்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

தமிழ் கட்சிகளை பொறுத்த வரையில் எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப்போது மதில் மேல் பூனையாக உள்ளது. யாருக்கு வாக்களிக்கலாம் என்னும் தீர்மானத்தை மேற்கொள்ளும் சக்தி அற்றவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர்.

அன்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவோடு 13 அம்ச கோரிக்கையினை கொண்டு வந்ததாக கூறினர். உண்மையிலேயே இந்த 13 அம்ச கோரிக்கையினையும் முன்மொழிந்தவர்கள் இவர்களாக இருக்க முடியாது. இது இந்தியா அல்லது சர்வதேசத்தின் கோரிக்கைகளாகவே இருக்க முடியும். இந்த கோரிக்கைகளை எந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளாது. இதனை இரு பிரதான கட்சிகளும் கூறிவிட்டது.

ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கையினை முன்வைப்பதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனவும் இதற்கு முடிவெடுக்க முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தரப் போகின்றனர் என்றார்.

சுமந்திரன் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற ஒரு தலைவர். அவரால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய முடியாது. அமெரிக்காவின் பிரதிநிதியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் புகுத்தப்பட்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோகராக நியமிக்கப்பட்டவரே அவர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை