1988 ஆம் ஆண்டுக்குப் பின் ஐ.தே.கவுக்கு ஜனாதிபதி பதவி

இம்முறை ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்வதென்பது 1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ. தே. கவுக்குக் கிடைக்காத அரசியல் தலைமையை மீண்டும் பெற்றுக்கொள்வதாகும் என ஐ. தே. கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதுடன் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் அமைச்சரவை ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்குக் கிடைக்குமென தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குளியாப்பிடி தேர்தல் தொகுதியில் பிரதேச மற்றும் தொகுதி ரீதியாக நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் காணப்பட்ட அனைத்து கருத்து மோதல்களையும் முடிவுக்குக் கொண்டுவந்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஏகமனதாக நியமித்ததன் பின்னர் அவரின் வெற்றிக்காக அனைவரும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். தேர்தலில் வெற்றியடைந்த பின்னர் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வெற்றி கரமாக நிறைவேற்ற முடியும்.

சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கூறினார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்காக கட்சி, நிறபேதமின்றி 47 கட்சிகளும், அமைப்புகளும் சஜித்துக்கு ஆதரவு வழங்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறினார். ராஜபக்ஷ என்னும் ஒரு குடும்பத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவந்து அவர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்காதிருப்பதற்காக அனைத்து அணிகளும் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

2015இல் எமக்கென்று அரசாங்கமொன்றை அமைக்க எமக்கான ஜனாதிபதியொருவர் இருக்கவில்லை. நடுநிலையாக இருப்பேன் என்று கூறினாலும் அவர் அவ்வாறு இருந்தாரா என நீங்கள் அறிவீர்கள்.

எங்களுக்கு இந்த மூன்றரை வருடங்களில் தேசிய அரசாங்கமாகச் செயற்பட்டதால் அநேகமான விடயங்களை செய்ய முடியாமல் போனது. தடைகளுக்கு மத்தியில் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இறுதி மாதங்களில்தான் நாம் வேகமாக வேலைகளைச் செய்யக்கூடியதாக இருந்தது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஏனைய காலங்களைவிட கிராமிய மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வந்துள்ளார்கள். நாள்தோறும் எம்மோடு இணையும் மக்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. மாற்றம் ஏற்பட்டுள்ளது. மொட்டுக்கட்சியின் அங்கத்தவர்கள் கூட எம்முடன் இணைகிறார்கள். சஜித்தின் வெற்றிக்காக மக்கள் ஏனைய தேர்தல்களைவிட இம்முறை அதிகளவு ஆர்வம் காட்டுகின்றார்கள். கட்சி, நிற பேதமின்றி தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை அபிவிருத்தி செய்து சுதந்திரமாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தை தவறிவிட வேண்டாமென மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை