மக்களின் உண்மையான பிரச்சினைகளை பேசும் அரசியல் பொறிமுறை இல்லை

மக்களின் உண்மையான பிரச்சினைகளை பேசும் அரசியல் பொறிமுறையொன்று நாட்டில் இல்லை. அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை பேசும் அரசியல் பொறிமுறையே நாட்டில் நிலவிவருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் சுகாதாரக் கொள்கைகளை வெளிப்படுத்தும் நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எமது நாட்டின் மக்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றும் சுகாதாரக் கொள்கைகளையே நாம் வெளியிட்டுள்ளோம். பணம் உள்ளவர்கள் சுகாதாரச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முறையே நாட்டில் காணப்படுகிறது. வைத்தியசாலைகளுக்கு வெளியில்தான் சுகாதாரத்தை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. இந்த முறைமையை மாற்றி சகலரும் சமமான உயரிய சுகாதாரத்தை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே எமது கொள்கைகள் அமைந்துள்ளன.

இவற்றை நோக்கியே ஆக்கபூர்வமான விவாதங்களை நகர்த்த வேண்டும். ஆனால், தொண்டமான் யாருக்கு ஆதரவளிக்கிறார்? அவர் யாருக்கு ஆதரவளிக்கார்? என்றே எமது நாட்டில் விவாதங்களும் கருத்தாடல்களும் இடம்பெற்று வருகின்றன. மக்களுக்கு இவ்வாறான விவாதங்களும் கருத்துகளும் அவசியமற்றதாகும் என்பதுடன்,தோட்டப்புற மக்கள் எதிர்பார்ப்பதும் இதுவல்ல.

மக்களின் உண்மையான பிரச்சினைகளை அரசியல் மேடைகளில் எவரும் பேசுவதில்லை. அவ்வாறான அரசியல் பொறிமுறையொன்றும் எமது நாட்டில் இல்லை. அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை பேசும் அரசியல் பொறிமுறையொன்றே காணப்படுகிறது. இதனால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை