இனவாத நோக்குடன் பேரம் பேசும் அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும்

- சட்டத்தரணி அலி சப்ரி

இனவாதத்துடன் மக்களை பேரம் பேசி ஏல விற்பனை செய்யும் அரசியலை மறுதலித்து தேசிய அரசியல் கட்சிகளுக்கு வாக்களியுங்கள், எந்த கட்சியானாலும் சரி ஒரு கொள்கையுடைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள். இனவாத ரீதியிலான கட்சிளுடன் ஒன்றிணைய வேண்டாம். அது மிகவும் பயங்கரமானது. அதற்கு எதிராகத் தான் நாங்கள் எழுந்து வந்துள்ளோம் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் முன்னணியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து அக்குறணை கிங் கோட்ஸ் மண்டபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் முன்னணியின் தலைவர் மில்பர் கபூர் தலைமையில் இடம்பெற்றது. கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு முஸ்லிம்கள் வழங்கும் வாக்குகள் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய மிகவும் பெறுமதியான தேர்தல் ஆகும்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது மொட்டுக் கட்சிக்கு 50 இலட்சம் வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 14 இலட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன. மொத்தம் 64 இலட்சம் ஆகும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு 36 இலட்சம் வாக்குகளும், தமிழ் கூட்டமைப்புக்கு 3 இலட்சம் வாக்குகளாகும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு இலட்சம், அ.இ.ம.காங்கிரஸுக்கு ஒரு இலட்சம் என மொத்தம் 41 இலட்சமாகும். 65 இலட்சதுக்கும் 41 இலட்சதுக்கு இடையில் வித்தியாசம் இருக்கின்றது. இந்த வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக கடந்த காலத்தில் என்ன செய்துள்ளார்கள்? உயிர்த்த ஞாயிறு தினத்தில் முழு இலங்கை முஸ்லிம் மக்களின் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. இதற்கான பதிலை எல்பிட்டிய மக்கள் வழங்கினார்கள்.

எந்நாளும் செய்த மடத்தனமான வேலைகளைச் செய்ய வேண்டாம். ரிசாட், ஹக்கீம் எப்பொழுதும் இனவாத அரசியலைச் செய்து முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடித்தார்கள். பாராளுமன்றம் சென்று கோடி கோடியாகச் சம்பாதித்து எந்நாளும் அரசாங்கம் செய்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு என்ன நடந்துள்ளது. எங்களுடைய மக்கள் கிராம மட்டத்தில் பிரிக்கப்பட்டு எத்தனையோ வருடங்களாக இருந்த சக வாழ்வு இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. அதற்கு இனிமேலும் இடமளிக்கப்படமாட்டாது,

மாவத்தகம தினகரன நிருபர்

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை