உள்ளூராட்சி சபையை கூட நிர்வகிக்க முடியாதவரால் நாட்டை ஆள முடியுமா?

இலாபமீட்டிய லங்கன் விமான சேவை  கோட்டா பொறுப்பேற்ற பின்பே நஷ்டமடைந்தது

சிறந்த முகாமைத்துவ பண்பு இருப்பதாக கூறும் கோட்டாபய ராஜபக்‌ஷ குறைந்த பட்சம் உள்ளூராட்சி சபையிலோ நகர சபையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ கூட உறுப்பினராக இருந்துள்ளாரா? இத்தகைய ஒருவரால் எப்படி நாட்டை ஆள முடியும் என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். லாபமீட்டிய லங்கன் விமான சேவையில் இவர் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர் நஷ்டமடைந்ததாக கூறிய அவர், மிஹின் லங்கா தலைவராக கோட்டாபய வந்த பின்னர் அந்த நிறுவனம் காணமல் போனதாகவும் குறிப்பிட்டார். பிலியந்தலையில் நடைபெற்ற ஐ.தே.க கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் உரையாற்றிய அவர், அமெரிக்க பிரஜா உரிமையை ரத்து செய்ததாக கடந்த ஏப்ரலில் அவர் அறிவித்தார். அவருக்கு இலங்கையின் ஜனாதிபதி பதவி மாத்திரம் தான் அமெரிக்க பிரஜா உரிமைக்கு

 

இரண்டாம் பட்சமாகிறது. யுத்த காலத்தில் அமெரிக்காவுக்கு ஓடிய அவர் ஜனாதிபதியாக வருவதற்காக அமெரிக்காவை கைவிடுகிறார். அமெரிக்காவை பாதுகாப்பதாக உறுதியளித்துள்ள கோட்டபய ராஜபக்‌ஷ இன்னும் அமெரிக்க பிரஜையாகவே இருக்கிறார்

அமெரிக்க பிரஜை ஒருவர் நாடொன்றின் ஜனாதிபதியாவது தொடர்பில் அமெரிக்கா, சி.ஜ.ஏ நேடோ என்பன தான் மகிழ்ச்சி அடையும். இதற்கு நாம் இடமளிப்பதா, இல்லையா என முடிவு செய்ய வேண்டும்.

கட்டுக்கோப்பான நாடொன்றை உருவாக்குவதாக கோட்டாபய கூறியுள்ளார். பிரபாகரன் வன்னியை கைப்பற்றியிருந்த காலத்தில் கட்டுக்கோப்பாகத்தான் அதனை வைத்திருந்தார். அங்கு திருட முடியாது. வீதி ஒழுங்குகளை பேண வேண்டும். மீறினால் மரணம் தான் தண்டனையாக வழங்கப்படும். ஜனநாயக நாட்டில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் நடப்பதே பிரதானமானது.

எல்லா இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதாக சிலர் குறைகூறுகின்றனர். வடகொரியாவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறதா?

பிரச்சினைகள் இருந்தாலும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது.மரணம் தான் பரிசாக கிடைக்கும்.இது எப்படி ஒழுக்கநிலையாகும். தமது அடையாள அட்டையும் கடவுச்சீட்டும் இருந்த கோப்பை மறைத்த நபரிடமிருந்து எப்படி ஒழுக்கநிலை எதிர்பார்க்க முடியும்.

7000 படைவீரர்களை பயன்படுத்தி புல் வெட்டவும் கால்வாய்களை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுத்த நபர் வேண்டுமானால் வாக்களியுங்கள்.சிறந்த முகாமைத்துவ பண்பு இருப்பதாக கூறும் கோட்டாபய குறைந்த பட்டசம் உள்ளூராட்சி சபையிலோ நகர சபையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ உறுப்பினராக இருந்துள்ளாரா? செயலாளரகாக மாத்திரம் தான் இருந்துள்ளார். ஒரேயடியாக நாட்டின் ஜனாதிபதியாகி நாட்டை நிர்வகிக்கத் தயாராகிறார்.

லங்கன் விமான சேவை பணிப்பாளர் சபை உறுப்பினராக கோட்டபய இருந்தார். 14,000 மில்லியன் இலாபமீட்டும் நிறுவனமாக இருந்த விமானச் சேவை இவர் பொறுப்பேற்ற பின்னர் 250 மில்லியன் நஷ்டமீட்டும் நிறுவனமாக மாறியது. நாயை அழைத்துவர போயிங் விமானத்தை அனுப்பினார்கள். காதலியின் தேவைக்காக விமானத்தை திருப்பி அனுப்பினார்கள். கட்அவுட் அச்சிடுவதற்காக ஸ்ரீலங்கன் விமானச் சேவையினூடாக 45 கோடி ரூபா குமா ஸ்ரிக்கர் நிறுவனத்திறக்கு வழங்கினார்கள்.

மிஹின் லங்கா நிறுவன தலைவராக கோட்டபய இருந்தார். இன்று 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் மாத்திரம் தான் எஞ்சியுள்ளன. கோட்டபயவின் முகாமைத்துவத்தின் மகிமை இதுதான்.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 39 ஆயிரம் மில்லியன் கடன் சுமையை கோட்டாபய வைத்துவிட்டுச் சென்றார். நாம் தான் அதனை செலுத்தியிருந்தோம். கோட்டாபய மாத்திரமல்ல, சமல், பெசில், மஹிந்த ராஜபக்‌ஷ இவர்களில் ஒருவராவது உருவாக்கிய அரச நிறுவனமொன்றை முடிந்தால் கூறுங்கள்.

ஒரு நீதிமன்றத்தினால் வழங்கப்படும் உத்தரவு மற்றொரு நீதிமன்றத்தினால் நிறுத்தப்படும். நீதித்துறை குழப்பம் காரணமாக நியாயத்தை நிலைநாட்டுவது தாமதமாகி வருகிறது.

இராணுவ தலைமையகத்தை குறைந்த விலைக்கு விற்று கொமிஸ் பெற்றார்கள். புதிய தலைமையகம் 21 ஏக்கரில் உருவாக்கப்படுகிறது. அமெரிக்க இராணுவ தலைமையகமான பெண்டகன் கூட இதனை விட இரண்டு மடங்கு தான் பெரியது.

இராணுவ தலைமையகத்தில் எமது நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்களையும் கொண்டு செல்ல முடியும்.இந்த வறிய நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமிற்கு 64,000 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.இதனை நிர்வகிப்பதற்கு 9.5 பில்லியன் ரூபா செலவாகும். இது எமது நாட்டுக்கு ஒத்துவராத பாரிய சுமையாகும். ராஜபக்‌ஷ குடும்ப உறவினர் ஒருவர் தான் இதற்காக வடிவமைப்பை வரைந்திருந்தார். இவருக்கு 640 மில்லியன் கிடைத்துள்ளது.

எவன் கார்ட் மோசடியால் பல கோடி இழப்பு ஏற்பட்டது. கடற்படைக்கு இதனை கையளித்தால் 8000 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளது.

மிக் விமான கொள்வனவு மோசடியினூடாகவும் பலகோடி நஷ்டம் ஏற்பட்டது. பழைய பொருட்களை கொண்டுவந்து கொட்டிவிட்டு பணத்தை மோசடி செய்தார்கள். வழக்கு விசாரணைகள் தாமதமாவதால் மோசடி செய்தவர்கள் நிரபராதிகள் போன்று சுதந்திரமான செயற்பட்டு வருகின்றனர்.

அடுத்த ஆட்சியில் இவ்வாறான சகல டீல்காரர்களற்ற இளம் அமைச்சரவை ஒன்றை உருவாக்கி மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவோம் என்றும் அவர் கூறினார். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை