ஐந்து தமிழ்க்கட்சிகள் பொது இணக்கப்பாடு

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

13 அம்சக் கோரிக்ைக;  புதிய ஜனாதிபதிக்கு  மூன்று மாத காலக்ெகடு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய நிபந்தனைகள் தொடர்பில் ஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று பொது இணக்கப்பாட்டுக்கு வந்தன.

இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புெளாட், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளே இப் பொது இணக்கப்பாட்டில் கையொப்பமிட்டு தமது ஆதரவினை தெரிவித்தன. புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறி முறைகளின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள

மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

வடக்கு- கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் தெரிவு செயயப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும் உள்ளிட்ட 13 நிபந்தனைகளை உள்ளடக்கிய உடன்படிக்கையிலேயே இவ் ஐந்து கட்சிகளும் கையொப்பமிட்டன. இந் நிபந்தனைகள் அடங்கிய ஆவணத்தை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்து பேரம்பேசுவது என்றும், அதேநேரம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள 13 முக்கிய நிபந்தனைகளையும் புதிய ஜனாதிபதி பதவியேற்று மூன்று மாத காலப் பகுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதும் உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாம் முன்வைத்த நிபந்தனைகள் ஏனைய கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி இவ் இணக்கப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ் உடன்படிக்கையில் கையொப்பமிடாது கூட்டத்திலிருந்து வெளியேறி சென்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எந்த வேட்பாளரை ஆதரிப்பது, அவர்களிடம் என்ன நிபந்தனைகளை முன்வைத்து பேரம்பேசலை முன்னெடுப்பது என்பது தொடர்பாக தமிழ் தேசிய கட்சிகளிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இறங்கியிருந்தனர்.

இதற்கமைய கடந்த சில நாட்களாக பல்கலைகழக மாணவர்களது தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி, புளட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தொடர்ச்சியாக மூன்று சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் மாலை யாழில் இடம்பெற்ற நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் ஆறு தமிழ் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டில் கைச்சாத்திடுவதற்காக ஒன்றுகூடியிருந்தன.

இதன்படி இக் கூட்டம் மாலை நான்கு மணியளவில் ஆரம்பமாகி இரவு 10 மணி வரை இடம்பெற்ற போதும் சில விடயங்களிடையே கட்சிகளுக்குள் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் நேற்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் ஐந்தாம் கட்டமாக இப் பேச்சுவார்தை மீண்டும் ஆரம்பமாகியது. இதில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன், புளட் அமைப்பின் சார்பில் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ சார்பாக தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் சட்டத்தரணி சிறிகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக செயலாளர் நாயகம் சீ.வி.விக்கினேஸ்வரன், பொது அமைப்புகள் சார்பாக கிருஸ்தவ மதகுரு ஒருவரும், சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரி சிதாகானந்தா சுவாமிகளும், யாழ். பல்கலைக்கழக அரசறிவியற்றுறைப் பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் அ.ஜோதிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இக் கலந்துரையாடலின் ஆரம்பம் முதல் பலமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சமஸ்டியா? ஒற்றையாட்சியா? என்பது குறித்து தங்களது நிலைப்பாட்டில் மாற்றமேதுமில்லை என்ற நிலைப்பாட்டுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடாப்பிடியாக நின்றது.

தயாரிக்கப்படும் பொது இணக்கப்பாட்டில் இடைக்கால அரசியலமைப்பை எதிர்பதான பதம் இடம்பெற வேண்டும் என முன்னணி அடம்பிடித்தது. ஆனால் ஏனைய ஐந்து கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஓர் கட்டத்தில் மாணவர்களைப் பாரத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “நீங்கள் ஒரு நிரலுடன் இயங்குகிறீர்கள்” என்று கடுந்தொனியில் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் “ எங்களைப் பார்த்தால் சிறு பிள்ளைகளாகத் தெரிகிறதா? “ என கேட்டனர். இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தாம் ஒப்பமிட்டு விட்டு போகப் போவதாகத் தெரிவித்தனர். அதனையடுத்து சல சலப்பு சற்று அடங்கியதுடன் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொருவராக ஆவணத்தில் கையொப்பமிட்டனர். அதேநேரம் இக் கூட்டத்தில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேறிச் சென்றது.

பருத்தித்துறை விசேட நிருபர், எஸ். நிதர்ஷன்

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை