தேர்தலன்று சீரற்ற காலநிலை ஏற்படுமாயின் விசேட ஏற்பாடு

தயார் நிலையில் ஆளணிகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தேர்தல் காலத்திலும் நீடிக்குமாயின் வாக்களிப்புக்கு பாதகம் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நவம்பர் நடுப்பகுதியில் சீரான காலநிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றபோதும் அது தொடர்பில் தற்போதே எதிர்வுகூற முடியாதுள்ளது. எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம் கொடுக்கும் விதத்தில் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய தேர்தல் நடத்தப்படவுள்ள தினங்களில் அதிக மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கும் கொண்டு செல்லுதல், வாக்காளர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லுதல், வாக்களிப்பு நிலையங்களுக்கு அவசியமான பாதுகாப்புகளை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் அவசியமான படகுகளும் ஆட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி கூறினார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சின் செயலாளர்,

செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு அமைச்சின் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தேர்தல் பிர சாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் தனக்கு இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லையென்றும் அவ்வாறு கிடைத்தால் அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யத் தயாரென்றும் பதிலளித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது-

அதிக மழை பெய்துள்ளபோதும் சிறந்த முன்னேற்பாடுகள் காரணமாக அதிர்ஷடவசமாக அனர்த்தங்களை இம்முறை குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. எனினும் மின்னல் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை