தேசப்பற்று, தேசியவாதத்தை சுயநலத்துக்கு பாவிக்க முயற்சி

இந்த ஜனாதிபதித் தேர்தல் நியாயத்துக்கும் அநியாயத்துக்குமிடையில் நடக்கின்ற பாரிய போட்டியாகும். தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்கலமாக வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் பயன்படுத்தும் கும்பலுக்கு எதிராக மக்கள் தங்களது வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (30) வவுனியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

கடந்த அரசாங்கத்தில் பெருந்தொகையானோர் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டனர். இவர்களை கண்டுபிடிப்பதற்கு எவ்விதமான பொறிமுறைகளுமின்றி அவர்களின் அப்பாவி உறவினர் செய்வதறியாது தவித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனத்தின் உத்தரவின் பிரகாரம் காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவை அமைத்துள்ளோம்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆணைக்குழுவில்

 

 பதிவுசெய்ய முடியும். இதன்மூலம்,காணாமலாக்கப்பட்டோரை கண்டறியும் விதத்தில், அவர்களது குடும்பத்தினரின்பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் வழங்கப்படும். அத்துடன் இழப்பீடுகளை வழங்கவும் அவர்களின் குடும்பத்துக்கு மறுவாழ்வாழ்வு அளிக்கவும் எம்மிடம் திட்டங்கள் உள்ளன.

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களை மீளமைப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது. அதுமட்டுமன்றி, தனிப்பட்ட வன்மங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல், அட்டூழியங்கள், அட்டகாசங்கள் இனியும் தொடராமல் தடுப்பதற்கான உத்தரவாதங்களை தற்போதைய அரசாங்கத்தினால் சட்டமூலமாக அமுல்படுத்தியுள்ளோம்.

நாட்டின் இளம் சந்ததியினருக்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உருவாக்குகின்ற இளம் தலைவராக சஜித் பிரேமதாசவை களமிறக்கியுள்ளோம்.

இதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, சகவாழ்வை விரும்பும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அவருக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றனர். இதைவிட பெரியதொரு ஆறுதலை மக்கள் அடையப் போவதில்லை.

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை