ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தடகள வீராங்கனை நிர்மலாவுக்கு 4 ஆண்டு தடை

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரானுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரானிடம் கடந்த ஆண்டு (2018) ஜூன் மாதம் இந்தியாவில் நடந்த போட்டியின்போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் நிர்மலா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

தன் மீதான ஊக்க மருந்து புகாரை ஏற்றுக்கொண்ட அவர் மேலும் விசாரணை நடத்துமாறு கேட்கவில்லை. இதையடுத்து சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுங்குமுறை கமிட்டி நிர்மலாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இந்த தடை 2018-ம் ஆண்டு ஜூன் 29 ம் திகதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அவரது வெற்றிகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017-ம் ஆண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீற்றர் ஓட்டம் மற்றும் 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் நிர்மலா வென்ற தங்கப்பதக்கங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை