10 ஓவர்களின் பின் எம்மால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை – சர்பராஸ்

பத்து ஓவர்களுக்கு பின்னர் எமக்காக சிறந்த தருணம் ஒன்று கிடைக்கவில்லை. இதுவே, தோல்விக்கு காரணம் என பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்

லாஹூரில் இடம்பெற்று முடிந்திருக்கும் மூன்றாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 13 ஓட்டங்களால் தோற்கடித்த இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 3---0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றி மூலம் இலங்கை கிரிக்கெட் அணி, முதல்தடவையாக 20க்கு 20 தொடர் ஒன்றை 3- --0 என கைப்பற்றியிருக்க, பாகிஸ்தான் அணி தமது சொந்த மைதானத்தில் வைத்து ஆறுதல் வெற்றி ஒன்றினை கூட பெற முடியாமல் மோசமான தோல்வியினை பதிவு செய்திருக்கின்றது.

இந்நிலையில் 20க்கு 20தொடரை இழந்த பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட், மூன்றாவது போட்டியில் தமது தோல்விக்கான காரணங்களை விபரித்திருந்தார்.

சர்பராஸ் அஹமட் இலங்கை அணியின் வெற்றி இலக்கை விரட்டும் சந்தர்ப்பத்தில் பத்து ஓவர்களுக்கு பின்னர் தமக்கு சிறந்த தருணம் ஒன்றை பெற முடியாமல் போனதே தோல்விக்கு பிரதான காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

”நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாகவே செயற்பட்டிருந்தோம். அதோடு, எங்களுக்கு துடுப்பாட்டத்திலும் சிறந்த ஆரம்பம் ஒன்று கிடைத்திருந்தது. எனினும், (வெற்றி இலக்கை விரட்டும் சந்தர்ப்பத்தில்) பத்து ஓவர்களுக்கு பின்னர் எமக்காக சிறந்த தருணம் ஒன்று கிடைக்கவில்லை. இதுவே, தோல்விக்கு காரணம்”

தமது சிறப்பான பந்துவீச்சு மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையை 150 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்ததோடு ஹரிஸ் சொஹைல் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் மூலம் சிறந்த இணைப்பாட்டத்தையும் (76) பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமின்றி களத்தடுப்பு மோசமாக அமைந்ததும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் என சர்பராஸ் அஹமட் குறிப்பிட்டிருந்தார்.

”மத்திய ஓவர்களில் நாம் சிறப்பாக பந்துவீச தவறியிருந்ததோடு சில பிடியெடுப்புகளையம் தவறவிட்டிருந்தோம்.”

இலங்கை அணியுடனான 20க்கு 20 தொடரில் பாகிஸ்தான் வெவ்வேறு துடுப்பாட்ட வீரர் ஒழுங்குகளை கையாண்டிருந்தது. இதற்கான காரணம் என்ன எனக் கேட்கப்பட்டிருந்த போது சர்பராஸ் அஹமட் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

”இந்த 20க்கு 20 தொடரில் (எமது) துடுப்பாட்ட ஒழுங்கு சற்று மாறிமாறி அமைந்திருந்தது. ஏனெனில், நாம் இந்த தொடரில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்கள் எப்படி பிரகாசிக்கின்றார்கள் என்பதை பார்க்க விரும்பினோம்.”

எது எப்படி இருந்த போதிலும் சர்பராஸ் அஹ்மட் பாகிஸ்தான் அணி அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டி இருப்பதனை சுட்டிக்காட்டியிருந்தார்.

”நாம் இன்னும் எம்மை மூன்று துறைகளிலும் முன்னேற்ற வேண்டி இருக்கின்றது. அதோடு, நாம் மத்திய ஓவர்களிலும் கட்டாயம் நன்றாக செயற்பட வேண்டும்.”

இறுதியாக, சர்பராஸ் அஹ்மட் தமது நாட்டுக்கு வந்து கிரிக்கெட் விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு நன்றிகளை தெரிவித்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்டிருந்த காரணத்தினால் சர்வதேச அணிகள் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுப்புத் தெரிவித்திருந்தன. இந்நிலையில், இலங்கை அணியின் தற்போதைய சுற்றுப் பயணமே, கடந்த நான்கு ஆண்டுகளில் கிரிக்கெட் அணியொன்று பாகிஸ்தானின் சொந்த மண்ணில் விளையாடும் முழுமையான தொடராக கருதப்படுகின்றது.

பாகிஸ்தான் அணியுடனான 20க்கு 20 தொடரை இளம் வீரர்களை மாத்திரம் கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்ததாக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி, அந்நாட்டு வீரர்களுடன் மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரில் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை