இராணுவத்திற்கு சாரதி பயிற்சி வழங்க அனுமதி; இன்று முதல் 30 அலுவலக ரயில் சேவைகள்

ரயில் தொழிற்சங்கங்கள் நினைப்பது போல தொடர்ந்தும் ஆட இடமளிக்க முடியாதெனக் கூறியுள்ள பதில் போக்குவரத்து அமைச்சர் அசோக அபேசிங்க இராணுவத்தினரை ரயில் ஓட்டுநர்களாக பயிற்றுவிப்பதற்கு இராணுவத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இன்று 30 அலுவலக ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஒப்பந்த அடிப்படையிலான ரயில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 11 ஆவது நாளாகவும் நீடித்தது.சம்பள முரண்பாடு தொடர்பான பிரச்சினையை முன்வைத்து கடந்த மாதம் 25 நள்ளிரவுமுதல் இப் போராட்டம் இடம்பெறுகிறது.

இந்த நிலையில் இராணுவத்தினரை சாரதிகளாக பயிற்றுவிக்க

இராணுவத் தளபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இன்று முதல் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறிய அவர், இன்று (திங்கட்கிழமை) முதல் 30 அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த முடியுமெனவும் கூறியுள்ளார். இதன் மூலம் 60 ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் அதனூடாக அலுவலக ரயில் சேவைகள் முழுமையாக நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்குமாறு கோரி, ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று 11வது நாளாக முன்னெடுக்கப்பட்டது. ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். இதனால் உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து ஊழியர்களுக்கும் பொது முகாமையாளர் உத்தரவுப்பிறப்பித்துள்ளார்.

இதேவேளை கடந்த 11 நாட்களாக இடம்பெற்ற ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரயில்வே திணைக்களம் 110 மில்லியன் ரூபாவுக்கு மேல் சேமிக்க முடிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுமார் மூவாயிரம் ரயில்வே ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு வழங்காமை, எரிபொருள் பாவனை குறைந்தமை மற்றும் ரயில்வே துறையில் செயற்படும் உதவி ஊழியர்கள் செயற்படாமை ஆகியவற்றின் மூலம் மேற்படி நிதி சேமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை