ஜனாதிபதியை தீர்மானிக்கவே முஸ்லிம் வேட்பாளர் போட்டி

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுவது ஜனாதிபதியாவதற்காக அன்றி ஜனாதிபதி யார் என்று தீர்மானிப்பதற்காகவே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் சனிக்கிழமை இரவு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,ஜனாதிபதியாவதற்காக முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடத் தேவையில்லை. ஜனாதிபதியை தீர்மானிப்பதற்காகவே போட்டியிட வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் நான்கு

கட்சிகள் போட்டியிட்டால் கடும் போட்டியிருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டும் வெளியேறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றவர் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசாவை வேட்பாளராக நிறுத்தினால் அதுவும் போட்டியாக இருக்கும்.

மற்றய தரப்பில் கோத்தாபய ராஜபக்ச, அதே போன்று அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்பாளராக போட்டியிடுவார்கள். இதனால் தேர்தல் கடும் போட்டியாக இருக்கும்.

இந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்திலும் பிரசாரங்களை செய்து இலங்கையிலுள்ள முஸ்லிம் வாக்குகள் அனைத்தையும் பெற முயற்சிக்க வேண்டும்.

ஆகக் குறைந்தது மூன்று இலட்சம் வாக்குகளையாவது அந்த முஸ்லிம் வேட்பாளர் எடுத்தால் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக மாற முடியும். அதனால் தான் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று நான் முன்மொழிந்துள்ளேன்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 50 வீதமான வாக்குகளை பெற முடியாத சூழ் நிலை வருமாக இருந்தால் முஸ்லிம் சமூகத்தினுடைய வாக்குகள் ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும்.

நாட்டில் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பாரிய சதிகள் தொடர்வதைத் தடுக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று பட்டு செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை