தோமஸ் குக் நிறுவனம் முடக்கம்: 1.5 இலட்சம் பயணிகள் நிர்க்கதி

உலகின் மிகப் பழமையான பயண நிறுவனமான பிரிட்டனின் தோமஸ் குக் கடன் பிரச்சினையால் முடங்கியுள்ளது. இதனால் உலகெங்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நிர்க்கதியாகியுள்ளனர்.

கடன் அளித்தவர்களிடம் இருந்து மீட்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் நிறுவனம் தனது வர்த்தகத்தை நிறுத்துவதை இட்டு வருந்துகிறோம் என்று அதன் தலைமை நிறைவேற்று அதிகாரி பீட்டர் பிரன்கோசர் குறிப்பிட்டுள்ளார்.

தோமஸ் குக் தனது வர்த்தகத்தை நிறுத்தி விட்டதாக குறிப்பிட்டிருக்கும் பிரிட்டனின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 150,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கு அரசாங்கம் இணைந்து செயற்படும் என்று தெரிவித்துள்ளது.

1841 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தோமஸ் குக் நிறுவனம், ஆரம்பத்தில் உள்நாட்டு ரயில் பயணங்களை நடத்தியதோடு பின்னர் ஐரோப்பாவின் முன்னோடி சுற்றுலா பயண நிறுவனமான மாறியது. ஹோட்டல்கள், உல்லாசத் தளங்கள், விமானச் சேவை நிறுவனங்கள், சொகுசுக் கப்பல்கள் போன்றவை அந்த நிறுவனத்தின்கீழ் செயல்பட்டன.

16 நாடுகளைச் சேர்ந்த 19 மில்லியன் பேர் அதன் சேவைகளை நாடிவந்தனர்.

இந்த நிறுவனத்தின் திவால் நடவடிக்கையை அடுத்து 21,000 ஊழியர்கள் பணியிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகச் சரிவைச் சந்தித்துவந்த இந்த நிறுவனத்துக்கு வங்கிக்கடன் அதிகரித்தது. தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கு 250 மில்லியன் டொலர் தேவைப்பட்டது. அதைத் தனியாரிடம் திரட்டுவதற்காக, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும் கடனுதவி தருவோருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை பலனளிக்காததால், இந்த திவால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை