நெதன்யாகுவுக்கு பதில் காட்ஸ் ஆட்சி அமைப்பதற்கு அரபுக் கூட்டணி ஆதரவு

இஸ்ரேல் பொதுத் தேர்தல்:

இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு சவாலாக புதிய அரசு ஒன்றை அமைப்பதற்கு முன்னாள் இராணுவ தளபதி பென்னி காட்ஸுக்கு இஸ்ரேல் –அரபு கூட்டணி ஆதரவை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலில் கடந்த வாரம் நடந்த பொதுத் தேர்தலில் காட்ஸ் அல்லது நெதன்யாகு இரு தரப்பும் பெரும்பான்மை ஆசனங்களை பெறாத நிலையிலேயே இஸ்ரேலிய அரசுக்கு ஆதரவளிக்காத தனது வழக்கமான கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரபுக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு தேர்தலுக்கு செல்லாமல் இருப்பது குறித்து உறுதியாக உள்ள இஸ்ரேல் ஜனாதிபதி ரியுவென் ரிவ்லின், புதிய அரசை அமைப்பதற்கு காட்ஸை கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கட்சித் தலைவர்களுடன் ரிவ்லின் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் எந்த தரப்பும் தெளிவான வெற்றியை பெறாத நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் காட்ஸ் மற்றும் நெதன்யாகு கூட்டணி அமைப்பது குறித்து பரிந்துரைக்கப்பட்டபோதும் அது சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறை இடம்பெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி தெளிவான வெற்றி ஒன்றை பெறுவதற்கு தவறியுள்ளது. காட்ஸின் மையவாத நீலம் மற்றும் வெள்ளை கட்சி குறுகிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

எனினும் ஆட்சி அமைப்பதில் இதுவரை காலமும் இணக்கத்தை காண்பிக்காத அரபு சிறுபான்மையினரின் கூட்டணி 21 வீத வாக்குகளை வென்றுள்ளது. அந்த கூட்டணி 13 ஆசனங்கள் வென்றிருக்கும் நிலையில் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக உள்ளது.

இது இஸ்ரேலில் அரபு சமூகத்தின் மீதான பாகுபாடுகளுக்கு எதிரான பெரும் குரலாக பார்க்கப்படுகிறது.

“நெதன்யாகுவின் யுகத்தை முடிவுக்கு கொண்டுவர நாம் விரும்புகிறோம். எனவே பென்னி காட்ஸ் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு நாம் பரிந்துரைக்கிறோம்” என்று அரபு கூட்டணியின் தலைவர் ஐமன் ஒதேஹ் ஜனாதிபதி ரிவ்லினிடம் கடந்த ஞாயிறன்று கோட்டுக்கொண்டார்.

”நாங்கள் பென்னியையோ அவரது கொள்கைகளையோ ஆதரிக்கிறோம் என்பது அர்த்தம் அல்ல. பெஞ்சமின் மீண்டும் ஆட்சி அமைக்காமல் தடுக்கவே இந்த முடிவினை எடுத்துள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலில் உள்ள அரபு கட்சிகள் எந்த பிரதமருக்கும் தங்கள் ஆதரவை அளித்ததே இல்லை. பெஞ்சமின் நெதன்யாகு மீதான கோபம் அந்த அரபு கட்சிகளை 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பிரதமரை ஆதரிக்க வைத்துள்ளது.

இந்த கூட்டணி ஆதரவு அளித்தபோதும் அது அரசில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் அதன் ஆதரவு மூலம் காட்ஸின் மைய இடதுசாரி முகாம் பாராளுமன்றத்தில் 57 இடங்களை பெற வாய்ப்பு உள்ளது. அதுவே நெதன்யாகுவின் வலதுசாரி முகாம் 55 ஆசனங்களையே பெற்றிருக்கும்.

காட்ஸ் அரபு கட்சிகளின் ஆதரவை பெறுவதை நெதன்யாகு கண்டித்துள்ளார். தற்போது இரண்டு தேர்வுகளே இருப்பதாக குறிப்பிட்ட நெதன்யாகு ஒன்று “இஸ்ரேல் ஒரு யூத ஜனநாயக குடியரசு என்பதை நிராகரிப்பவர்களுடன் இணைந்து சிறுபான்மை அரசொன்றை அமைப்பது” அல்லது “பரந்த தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது” என்று குறிப்பிட்டார்.

தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் நெதன்யாகுவின் அழைப்பை காட்ஸ் இதுவரை மறுத்து வந்துள்ளார்.

தேர்தலின் இறுதி முடிவுகளின் படி 120 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் காட்ஸின் நீலம் மற்றும் வெள்ளை கட்சி 33 இடங்களை வென்று மிகப் பெரிய ஒற்றை கட்சியாக உள்ளதோடு நெதன்யாகுவின் லிகுட் கட்சி 31 ஆசனங்களை பெற்றுள்ளது. அந்த கட்சி முன்னர் பெற்றதை விடவும் மூன்று இடங்கள் குறைவாக இது உள்ளது.

லிகுட் கட்சி தலைவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்த ஜனாதிபதி ரிவ்லின், முதல் இரண்டு இடங்களையும் பெற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அரசொன்றை அமைத்து ஸ்திரமான அரசு ஒன்றை அமைப்பதற்கு அழைப்பு விடுத்தார்.

“இதுவே மக்களுக்கு தேவை. அதனை யாராலும் புறக்கணிக்க முடியாது” என்று அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலில் ஜனாதிபதி பதவி சம்பிரதாயமானது என்ற போதும் எந்த கட்சி தலைவருக்கு ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டதாகும்.

தேர்தல் பிரசாரங்களில் இரு பிரதான கட்சிகளுக்கும் பிரதான விடயங்களில் ஒரு குறுகிய முரண்பாடே காணப்பட்டது. நெதன்யாகுவின் காலம் முடிவிற்றாலும் அவரின் அமெரிக்காவுடனான உறவு, ஈரான் தொடர்பிலான நிலைப்பாடு மற்றும் பலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

ஆட்சி அமைப்பதற்கு மற்றொரு சாத்தியமாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லிபர்மனின் தீவிர வலது சாரி கட்சியுடன் இணைவது பற்றியும் நெதன்யாகு மற்றும் காட்ஸ் இருவரும் முயற்சித்து வருகின்றனர்.

லிபர்மனின் யிஸ்ராயேல் பெயிட்னு கட்சி எட்டு ஆசனங்களை பெற்றிருக்கும் நிலையில் அவர் அரசை தீர்மானிப்பவராக மாறியுள்ளார்.

எனினும் ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றி கடந்த ஞாயிற்றுக்கிழமையும் வலியுறுத்திய லிபர்மன் ஜனாதிபதியுடனான சந்திப்பில் இரு வோட்பாளர்களையும் பரிந்துரைக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை