பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு சீன, ரஷ்ய நாடுகள் அழைப்பு

அமெரிக்கா ஏவுகணை சோதனை:

மத்திய தூர ஏவுகணைகளை மேம்படுத்துவது மற்றும் நிறுவுவது தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டிருந்த அறிவிப்புக்காக ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு ரஷ்யா மற்றும் சீனா அழைப்பு விடுத்துள்ளன.

“சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் 15 அங்கத்துவ நாடுகளின் கூட்டத்தை கூட்டுவதற்கு விரும்பும் ரஷ்யா மற்றும் சீனா, அதில் ஐ.நா ஆயுதக்களைவு விவகாரங்களுக்கான தலைவர் இசுமி நகமிட்சுவுக்கு உரையாற்றவும் கோரிக்கை விடுத்துள்ளது.

500 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்தை தாக்கும் கிரூஸ் ஏவுகணையை சோதித்ததாக அமெரிக்கா கடந்த திங்களன்று அறிவித்திருந்தது. பனிப்போர் காலத்தின் மத்தியதூர அணு ஆயுதங்கள் தொடர்பிலான உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பின் அது மேற்கொள்ளும் முதல் சோதனை இதுவாகும்.

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் தரையை தளமாகக் கொண்ட 500–5,500 கி.மீ பாயும் ஏவுகணைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறுகிய நேரத்திற்குள் அணு ஆயுத தாக்குதல் ஒன்றை தவிர்ப்பதே இதன் நோக்கமாக இருந்தது.

இந்த உடன்படிக்கையில் இல்லாத சீனாவிடம் பெறும் அளவான மத்திய தூர ஏவுகணைகள் உள்ளன.

அமெரிக்கா 1987 இன் இந்த உடன்படிக்கையில் இருந்து கடந்த ஓகஸ்ட் 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டதோடு ரஷ்யா உடன்படிக்கையை மீறியதாக குற்றம்சாட்டியது. அதனை ரஷ்யா மறுத்தது.

அமெரிக்கா புதிய ஆயுதப் போட்டி ஒன்றை ஆரம்பித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கங் ஷுவங், இது பிராந்தியம் மற்றும் உலக பாதுகாப்பிற்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டது.

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை