இந்து மதத்தை ஆக்கிரமிக்க இனியும் இடமளிக்கமாட்டோம்

பௌத்த மதத்துக்கும், இந்து, சைவ மதத்துக்குமிடையில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. எனவே, அந்த ஒற்றுமையை களமாகப் பயன்படுத்தி இந்து மதத்தையும், வழிபாட்டு தலங்களையும் ஆக்கிரமிப்பதற்கு சிலர் கங்கணம்கட்டி செயற்பட்டு வருகின்றனர். இதற்கு நாம் இனிமேலும் இடமளிக்கமாட்டோம் என்பதுடன் இப்பிரச்சினைக்கு வெகுவிரைவிலே முற்றுபுள்ளி வைப்போம் என இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இந்து, சைவ நிறுவனங்களும் அமைப்புகளும் உரிய வகையில் சட்டரீதியிலான நிர்வாகப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்படாமை உட்பட மேலும் சில காரணங்களாலேயே கடந்த காலங்களில் இந்துக்களின் அடையாளங்கள், வழிபாட்டு தலங்கள் என்பன திட்டமிட்ட அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டன. குறிப்பாக இந்து மதத்துக்கும், பௌத்த மதத்துக்குமிடையில் நிறையவே ஒற்றுமைகள் காணப்படுவதால் அவற்றையே ஒரு ஆக்கிரமிப்பு கருவியாகப் பயன்படுத்தி இந்துக்களின் புனித பூமியில்கூட மாற்று மதங்களை காலூன்ற வைப்பதற்குரிய சதி முயற்சிகள் திரைமறைவில் அரங்கேறின. தற்போதும் அரங்கேறிவருகின்றன. அந்தவகையில் கதிர்காமம், கண்டி கதிரேசன் ஆலயங்களில் பௌத்த மதத்தை கோலோச்சவைத்துள்ளனர். மேலும் பல இடங்களிலும் இவ்வாறு இடம்பெற்றுள்ளன. திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளிலும் மத ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதை பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான பணியெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மதத்தை ஆக்கிரமித்து – அழித்துதான் அதை செய்யவேண்டும் என எங்கும் கூறப்படவில்லை. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதுபோல் ஏனைய மதங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தி கூற விரும்புகின்றோம். இந்து சமய விவகார அமைச்சை எமது தலைவர் மனோ கணேசன் பொறுப்பேற்ற பின்னர்தான் இந்து மதத்துக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரை நிறுத்தியுள்ளோம். அத்துடன், இந்து – சைவ மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திவருகின்றோம்.

எனவே, எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுபடுவதற்கும், அவ்வாறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் சட்டரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்து நிறுவனங்களும், அமைப்புகளும் ஓர் சட்டரீதியிலான கட்டமைப்புக்குள் வரவேண்டும்.

அந்த பொறிமுறையை உருவாக்குவதற்காகவே எமது அமைச்சின் ஊடாக நடமாடும் சேவைகளை ஊர்தேடி சென்று நடத்தி வருகின்றோம்.

அதுமட்டுமல்ல இந்து சமயத்துக்காக மேலும் பல பணிகளை செய்யவுள்ளோம். குறிப்பாக இந்து மகா சபை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Wed, 08/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை