ஐ.தே.க யாப்பில் அப்படியேதும் கூறப்படவில்லை

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் வரை வேட்பாளரை யாரென அறிவிக்க முடியாதென ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் எந்தவொரு சரத்திலும் கூறப்படவில்லையென அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கவின் சட்ட செயலாளர் நிஸ்சங்க நாணயக்கார கூறும் விதிமுறைகள் கட்சியின் யாப்பில் இல்லை. கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் தனது பரப்புரையை திட்டமிட போதுமான கால, நேரம் இருக்க வேண்டும். பொருத்தமான வேட்பாளரைக் கண்டுபிடிப்பதை கட்சி தொடர்ந்து தாமதப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மக்களை ஏமாற்றவும், ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வெற்றிபெறுவதைத் தடுக்கவும் நிஸ்சங்க நாணயக்கார முயற்சிக்கிறார். அவ்வாறாயின் அவர் சட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைய, தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரிய பின்னரே, வேட்பாளரை அறிவிக்க முடியும் என்று கட்சியின் சட்ட செயலாளர் நிசங்க நாணயக்கார நேற்றுமுன்தினம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரை எவ்வாறு பெயரிடுவது என்பது குறித்த சிறப்பு ஏற்பாட்டை உள்ளடக்கியுள்ளார். ஐ.தே.க யாப்புக்கு அமைய, கட்சியின் மத்திய குழு, ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை முன்வைப்பதற்காக ஒரு வேட்புமனுக் குழுவை நியமிக்க வேண்டும். பின்னர் நியமனக் குழு தனது முடிவை மத்திய குழுவிடம் சமர்ப்பிக்கும். அந்த பெயரை மத்திய குழு அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான பின்புலத்திலேயே ஐ.தே.கவின் சட்ட செயலாளரின் கருத்துகளை அமைச்சர் அஜித் பி பெரேரா நிராகரித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 08/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை