சைற்றம் பட்டதாரிகளை உடனடியாகப் பதிவுசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

83 சைற்றம் மருத்துவ பட்டதாரிகளுக்கு விடிவு

மருத்துவ உள்ளகப் பயிற்சியை மறுக்கும் சுற்றுநிருபம் சட்டவலுவற்றதென்றும் தீர்ப்பு

சைற்றம் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற மூன்று மருத்துவ பட்டதாரிகளை மருத்துவக் கட்டளை சட்டத்தின் (29 (2) பிரிவின் கீழ் மருத்துவ தொழில் புரிபவர்களாக தற்காலிகமாகப் பதிவுசெய்ய உடனடியாக நடவடிக்ைக எடுக்குமாறு இலங்கை மருத்துவ சபைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (30) உத்திரவிட்டுள்ளது. அதேநேரம், மூன்று மருத்துப் பட்டதாரிகளுக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் நட்டஈட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பானது சைற்றம் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற 83 பட்டதாரிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து மூன்று வாரங்களுக்குள் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றும் இலங்கை மருத்துவ சபைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேற்படி மூன்று மருத்துவ பட்டதாரிகளும் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரிதீ பத்மன் சூரசேன கருத்து தெரிவித்த போது, இலங்கை மருத்துவ சபையானது நியதிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். இதற்கு முன் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நிதிமன்றம் ஆகியவை இதற்கு முன்னர் பிறப்பித்திருந்த உத்தரவை இலங்கை மருத்துவ சபை மீறியுள்ளதுடன் சட்டத்தை உதாசீனப்படுத்தும் நோக்கத்துடன் சட்டத்தை தனது கைகளில் எடுக்கும் வகையில் நடத்துகொண்டுள்ளது. அதேநேரம் மருந்து கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் பலக்கலைக்கழகங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு கீழ்ப்படிவதில் இருந்து இலங்கை மருத்துவ சபைக்கு விலக்களிக்கப்படவில்லை.

சைற்றம் பட்டதாரிகள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை உள்ளக பயிற்சி பெறும் மருத்துவ உத்தியோகத்தர்களாக நியமனங்களைப் பெற தகுதியுடையவர்கள் அல்லர் என்று ஒதுக்கி வைப்பதற்கு இந்த வழக்கின் பிரதிவாதிகளான சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை மருத்துவ சபை உள்ளிட்டோரால் ஏதாவது நடவடிக்ைக எடுக்கப்படுமானால், 29-.01.-2019 ஆம் திகதிய சுற்று நிருபத்தின்படி அந்தக் கூற்று சட்ட விரோதமானதென்றும் சட்ட வலுவற்றதென்றும் உச்சநீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை மதிக்கும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்தில் இருந்து எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் அதனை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மேலும் கூறியது.

மேற்படி மூன்று பட்டதாரிகளும் அரசியலமைப்பின் 12 (1) மற்றும் 14 (1) g என்ற அரசியலமைப்பு சட்டப்பரிவுகளின் பிரகாரம் தாங்கள் விரும்பிய தொழிலை செய்ய வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்துடன் கூடிய அடிப்படை உரிமைக்கு மாறாக பிரதிவாதிகள் நடந்து கொண்டுள்ளதாக இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் பிரீதி பத்மன் சூரசேன புவனேக அலுவிஹார, எல். டி. பி. தெஹிதெனிய ஆகியோரைக் கொண்ட குழாம் கூறியது.

சைற்றம் மருத்துவ கல்லூரியில் தேவையான பரீட்சைகளுக்குத் தோற்றி உரிய காலகட்டத்தில் MBBS பட்டத்தைத் தாங்கள் நிறைவு செய்துள்ளதாக மேற்படி மூன்று மனுதாரர்களும் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

சைற்றம் மருத்துவ கல்லூரியில் MBBS மருத்துவ பட்டம் பெற்ற பின்னர் மருத்து தொழில் புரிபவர்களாக மருத்துவ கட்டளை சட்டத்தின் 29வது பிரிவின் கீழ் நாங்கள் தற்காலிக பதிவுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதாக அவர்கள் தமது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இலங்கை மருத்துவ சபையானது தங்களினதும் சைற்றம் மருத்துவ கல்லூரியின் MBBS மருத்துவ பட்டம் பெற்ற மேலும் 82 மருத்துவ பட்டதாரிகளினதும் விண்ணப்பங்களை நிராகரித்து மருத்துவ தொழில் புரிபவர்களாகப் பணி புரிவதற்கான உரிய தகுதிகளை பெற்றிருந்தும் இலங்கை மருத்துவ சபை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக மேற்படி மருத்துவ பட்டதாரிகள் தமது அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

 நமது நிருபர்

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை