பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழுப்பலத்தையும் பயன்படுத்துவோம்

சகவாழ்வு தேசிய மாநாட்டில் ஜனாதிபதி

அச்சம் நிறைந்த சூழலை மாற்ற ஒன்றிணையுமாறும் அழைப்பு

பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழுமையான அரச பலமும் பயன்படுத்தப்படும். இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள சந்தேகம், அச்சம் நிறைந்த சூழலை மாற்றுவது இலகுவான காரியமல்ல. இந்த நிலைமையை மாற்றுவதற்கு சலகரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சில அரச அதிகாரிகள் தமது பொறுப்பினை சரியாக நிறைவேற்றியிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்த விடாது தடுத்திருக்க முடியும். தமது பொறுப்பிலிருந்து மீறியவர்கள் தற்பொழுது தம்மை நிரபராதிகள் என நிரூபிப்பதற்காக தன்மீது உள்ள தவறுகளை பூசி மெழுக முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார்.

கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜெ.எம்.முஸம்மில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் அஷ்ஷெய்க் கலாநிதி முஹம்மத் பின் அப்துல்கரீம் அல்லிஸ்ஸா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சர்வமதத் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இனங்களுக்கிடையில் சந்தேகம், அச்சம் மற்றும் பயம் நிலவுகிறது. இந்த நிலைமையை மாற்றுவது இலகுவான விடயம் அல்ல, சவாலான விடயமாகும். மிகவும் குறுகியதொரு முஸ்லிம் குழுவினரின் செயற்பாட்டினால் முஸ்லிம் இனத்தவர்களுக்கே பாரிய சிரமங்கள் ஏற்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் மக்களை சிங்களவர்களும், தமிழர்களும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலைமையை மாற்றுவதற்கு சகலரினதும் தனிப்பட்ட செயற்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பமான சூழ்நிலையை தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சிநிரலுக்காகப் பிழையாகப் பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து முற்கூட்டியே கிடைத்த தகவல்களை பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த உயர்மட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து பொறுப்புடன் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு சரியான தகவல்களை அவர்கள் வழங்கியிருக்கவில்லை. தாம் பொறுப்புடன் நடந்துகொள்ளாதுவிட்டு தற்பொழுது நிரபராதிகளாவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.

நாட்டில் சமாதானத்தையும், சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் அதேநேரம், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. அரசாங்கத்தின் முழுமையான பலத்தையும் பயன்படுத்தி பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடைபெற்ற மூன்று வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத குழுவை முற்றாக ஒழிக்க முடிந்தது. அந்தளவு குறுகிய காலத்துக்குள் பயங்கரவாதக் குழுவை ஒழித்த நாடாக நாம் காணப்படுகின்றோம். நாளாந்தம் இரவுபகல் பாராது முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து எடுத்த நடவடிக்கைகளால் இது சாத்தியமடைந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இனங்களுக்கிடையில் காணப்படும் குரோத நிலைமையை இல்லாமல் செய்வதற்கு இதுபோன்ற பல மாநாடுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. எமது முயற்சிகளுக்கு இந்த மாநாடு சிறியளவிலாவது ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதைப் பார்த்தும் சிலர் விமர்சனங்களை முன்வைக்கலாம். விமர்சனங்களை முன்வைப்பது இலகுவான விடயம்.

எனினும், நம்முன் காணப்படும் சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதே மிகவும் கடினமானவிடயமாகும். எதுவாக இருந்தாலும் நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கு எமது அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகிறது என்றார்.

மகேஸ்வரன் பிரசாத் 

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை