ஜப்பான் கலைக்கூடத்திற்கு தீ வைப்பு: 23 பேர் உயிரிழப்பு

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள கலைக்கூடம் ஒன்றில் தீ வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததோடு பல டஜன் பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் கலைக்கூடத்திற்குள் நேற்றுக் காலை ஊடுருவிய நபர் ஒருவர் அங்கு அடையாளம் காணப்படாத திரவம் ஒன்றை தெளித்ததாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதில் தொடர்ந்து 30 பேரை காணவில்லை என்று ஜப்பானின் என்.எச்.கே தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அடையாளம் வெளியிடப்படாத அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மூன்று மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் நேற்றுக் காலை தீ பரவியதோடு, மீட்பு நடவடிக்கைகள் மாலை வரை நீடித்தது.

“திரவம் மூலமாக ஒருவர் தீ மூட்டினார்” என கியோடோவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். அவரை பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, “திடீரென அக்கட்டடத்திலிருந்து குண்டு வெடித்ததுபோல் பெரும் சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து தீப்பிடித்ததால் அங்கு அலறல் சத்தம் கேட்டது. இதற்கு மேல் என்னால் ஏதும் கூற முடியாது” என்றார்.

இந்த கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டபோது 70 பேருக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். தீ வேகமாக பரவியதில் கட்டிடம் முழுவதும் எரிந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை