துருக்கிக்கு போர் விமானங்களை விற்பதை நிறுத்தியது அமெரிக்கா

ரஷ்ய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் முதல் பகுதியை பெற்றுக்கொண்ட துருக்கியை அமெரிக்கா தனது எப் –35 திட்டத்தில் இருந்து அகற்றியுள்ளது.

ரஷ்ய உளவு சேகரிப்புத் தளம் ஒன்றுடன் எப்–35 இனால் ஒன்றாக இருக்க முடியாது என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா தனது மேம்பட்ட எஸ் –400 அமைப்பை துருக்கிக்கு விநியோகிப்பதை கடந்த வாரம் ஆரம்பித்தது.

துருக்கி மற்றும் அமெரிக்கா முக்கிய நேட்டோ கூட்டணிகளாக இருந்தபோதும், துருக்கி ரஷ்யாவுடனும் நெருங்கிய நட்புப் பாராட்டி வருகிறது.

வெள்ளை மாளிகை பேச்சாளர் ஸ்டபனி கிரிஷாம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “துரதிருஷ்டவசமாக எப் –35 உடன் தொடர்புபட்டிருக்கும் நேரத்தில் ரஷ்யாவின் எஸ் –400 வான் பாதுகாப்பு அமைப்பை கொள்வனவு செய்ய துருக்கி தீர்மானித்துள்ளது.

வான் பாதுகாப்பு தேவைகளுக்காக துருக்கிக்கு வான் பாதுகாப்பு தீர்வுகளை வழங்குதற்கு அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டு வந்தது. அமெரிக்காவின் பட்ரொயிட் வான் பாதுகாப்பு அமைப்பை வழங்க எமது நிர்வாகம் பல சலுகைகளையும் வழங்கியது

65 ஆண்டுகளாக நேட்டோ நட்பு நாடாகவும் நீண்டகால நம்பிக்கைக்குரிய நட்பு நாடாகவும் இருந்து வரும் துருக்கி, ரஷ்யாவில் இருந்து ஒவ்வொரு தரப்பும் விலகிச் செல்லும் நிலையில் எஸ் –400 ஐ ஏற்று நேட்டோ கடப்பாடுகளை துருக்கி குறைத்து மதிப்பிடுகிறது” என்றார்.

எனினும் துருக்கியுடனான எமது மூலோபாய ரீதியான நட்புறவு அமெரிக்காவுக்கு அதிக மதிப்பு மிக்கதாகும் என்றும் கிரிஷாம் வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் அதிநவீன எப் –35 போர் விமானங்களில் 100 விமானங்களை வாங்குவதற்கு துருக்கி ஒப்பந்தம் செய்தது. எனினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையிலான உறவில் முறுகலை சந்தித்து வரும் துருக்கி சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை ஒன்றை பேணி வருகிறது. இதனால் அந்த நாடு எஸ் –400 வான் பாதுகாப்பு அமைப்பை கொள்வனவு செய்வதற்கு ரஷ்யாவுடன் 2.5 பில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்து கொண்டதோடு அதற்கான பயிற்சிகளுக்கு தமது படையினரை ரஷ்யாவுக்கு அனுப்பியது.

எனினும் ரஷ்யாவின் எஸ் –400 அமைப்புக்கு அருகில் தமது எப் –35 போர் விமானங்களை நிறுத்துவது குறித்து அதிருப்தி வெளியிட்ட அமெரிக்கா, இதன் மூலம் ரஷ்ய தொழில்நுட்பவியலாளர்களால் போர் விமானத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று அச்சம் வெளியிட்டுள்ளது.

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை