பருவ மழையால் தெற்காசியா எங்கும் வெள்ளப் பாதிப்பு: 180 பேர் உயிரிழப்பு

தெற்காசிய பிராந்தியத்தில் நீடித்து வரும் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மில்லியன் கணக்கான மக்கள் பாதித்திருப்பதோடு இதுவரை குறைந்தது 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிராந்தியத்தின் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பருவமழை தீர்க்கமாக இருப்பதோடு உலகின் ஐந்தில் ஒரு பங்கான மக்களுக்கு கடும் கோடைக்கு பின் பெரும் நிவாரணமாகவும் அமைகிறது. எனினும் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் தொடக்கம் செப்டெம்பர் வரை நீடிக்கும் மழை இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மிர் பகுதிகளின் தாழ்வான நிலங்களில் வசிக்கும் மக்கள் வெள்ள ஆச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த பருவமழையால் கடந்த திங்களன்று பங்களாதேஷில் ஐந்து சிறுவர்கள் மூழ்கியதோடு அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது. இதில் 18 பேர் மின்னல் தாக்கி பலியானதோடு ஏழு பேர் வங்காள விரிகுடாவில் தமது படகு கவிந்ததில் முழ்கி உயிரிழந்தனர்.

“பிரதான ஹிமாலய நதிகளில் ஒன்றான பிரஹ்மபுத்ரா அபாய அளவை விடவும் ஒரு மீற்றர் உயர்ந்திருப்பதால் நாட்டின் வடக்கில் வெள்ள நீரால் பல நூறாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நேபாளத்தில் குறைந்தது 67 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு வெள்ள நீர் குறைந்து வருகிறது. வெள்ள நீர் மூழ்கிய வீடுகளில் இருந்து மீட்பாளர்கள் இரப்பர் படகுகளை பயன்படுத்தி குடும்பங்களை அப்புறப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நீரினால் பரவும் நோய்கள் குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில் சர்வதேச உதவிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் நேபாளத்தை எல்லையாகக் கொண்ட இந்தியாவின் இரு மாநிலங்களான அஸாம் மற்றும் பீஹாரில் வெள்ளத்தினால் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ள ஆபத்து அச்சுறுத்தலான கட்டத்தை எட்டி இருப்பதாக அஸாம் நிர்வாகம் கடந்த திங்களன்று சிவப்பு அச்சுறுத்தல் விடுத்தது. அங்கு வெள்ள நீரினால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதோடு நெடுஞ்சாலைகளும் மூழ்கியுள்ளன.

இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் மொரிகோன் மாவட்டத்தில் வெள்ள நேர் வீடுகளின் கூரை மட்டத்திற்கு உயர்ந்துள்ளது. அங்கு மக்கள் தமது உடைமைகளுடன் வெள்ள நீரை கடந்து செல்ல போராடுவது புகைப்படங்கள் காட்டுகின்றன.

இந்த மாநிலத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதோடு வெள்ளத்தினால் சுமார் 83,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

உலகின் ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டா மிருகங்களில் மூன்றின் ஒரு பங்கின் வசிப்படமாக இருக்கும் உலக மரபுரிமைச் சொத்தான கசிரங்கா தேசிய பூங்காவும் வெள்ளத்தால் பதிக்கப்பட்டிருப்பதோடு அங்கிருக்கும் மிருகங்களை அடைவதிலும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறது.

பீஹாரில் 24 பேர் உயிரிழந்திருப்பதோடு 2.5 மில்லியன் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் கால்வாய் ஒன்றின் நீர் மட்டத்தை பார்க்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களும் அடங்கும்். அருகில் இருந்த நீர் நிரம்பிய சாக்கடையில் விளையாடிக் கொண்டிருந்து மேலும் இரு சிறுவர்களும் உயிரிழந்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வட மேற்காக பாகிஸ்தான் அதிகாரத்திற்கு உட்பட்ட காஷ்மிர் பிராந்தியத்தில் திடீர் வெள்ளத்தினால் 23 பேர் உயிரிழந்ததோடு 120 வீடுகள் சேதமடைந்து நீர் மற்றும் மின்சார விநியோகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான தேவைகளுக்கு உதவ பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த வெள்ளங்கள் தெற்காசியாவில் ஆண்டு தோறும் பெரும் உயிரிழப்பு மற்றும் இடம்பெயர்வுகளுக்கு காரணமாகி வருகிறது. இந்தப் பருவமழைக் காலம் தற்போதே ஆரம்பித்திருக்கும் நிலையில் அது எதிர்வரும் வாரங்களில் மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. 2017 ஆம் ஆண்டு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேபாளம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் 800 பேர் உயிரிழந்ததோடு விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளையும் சேதமடைந்தன.

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை