கிழக்கு ஆளுநர் மட்டு. விஜயம்; அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு

கிழக்கு மாகாணத்தின் புதியஆளுநர் சான் விஜயலால் டீ சில்வா நேற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்து மத்திய அரசினதும் மாகாண சபைமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒன்றியத்தின் விசேட நிகழ்வில் கலந்துகொண்டார்.

இங்கு சுமார் 75 கோடியே 58 இலட்சம் ரூபா செலவில் நடைபெற்றுவரும் மத்திய மற்றும் மாகாண நிதி ஒதுக்கீட்டினாலான அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க ரத்நாயக்க, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ், மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர்கள்,மாகாண, மாவட்ட அரச திணைக்களங்களின் பணிப்பாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இங்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் , மாகாண அரச பணியாளர்கள் தாம் எந்த அரசியல் கட்சி ஆதரவாளராக இருந்தாலும் அரசபணியில் அரசியல், இன,மத வேறுபாடுகளுக்கப்பால் பணி யாற்ற முன்வரவேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் இம்மாகாணத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் செயல்படுவதனை நான் நன்கு அறிந்துள்ளேன், விரைவில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களையும் உள்ளூராட்சி நிருவாக அதிகாரிகளையும் அழைத்து உள்ளூராட்சிமன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

(மட்டக்களப்பு சுழற்சி நிருபர் )

Tue, 06/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை