கோட்டாவுக்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதிமன்றில் விசாரணை

சித்திரவதைபற்றி குற்றச்சாட்டு

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான வழக்கொன்று கடந்த புதன்கிழமை அமெரிக்க நீதிமன்றமொன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அவர் மீது சித்திரவதை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவருக்கு எதிராக சாட்சியமளித்த ஆண்களும் பெண்களும் அடங்கிய 10 பேர், அவர்கள் மீது சூடான உலோகக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் மின்சார வயர்கள் மூலம் தாங்கள் தாக்கப்பட்டதாக வும், கோட்டாபய தலைமையிலான இராணுவம் மற்றும் பொலிஸாரே இவ்வித தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.

அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையே நடந்த முப்பதாண்டு காலத்தில் உள, உடல் மற்றும் பாலியல் ரீதியில் இந்தத் துன்புறுத்தல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

“இது தனியொரு சம்பவம் அல்ல. அத்துடன் இடைக்கிடை இடம்பெற்ற சம்பவங்களும் அல்ல” என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தோற்றிய சட்டத்தரணி எல்கொட் இல்மோர் கூறினார். இது மனித குலத்துக்கு எதிரான நிறுவன ரீதியான குற்றச் செயல் ஆகும். அத்துடன் அதனை இழைத்த நிறுவனத்தின் தலைவர் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆவார் என்று அவர் செய்தி ஸ்தாபனம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான இந்த வழக்கு லொகு ஏன்கல்ஸின் அரச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அமெரிக்க குடிமகன் ஒருவர் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் மரணம் மற்றும் சித்திரவதை தொடர்பாக அமெரிக்கா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட அமெரிக்க சட்டம் வழி வகுக்கிறது. இந்நிலையில் 2008 முதல் 2013 வரை கோட்டாபய பாதுகாப்பு செயலாளராக இருந்த இராணுவ முகாம்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்ற கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் மிலேச்சத்தனமான விசாரணைகளை மையப்படுத்தி இந்த குற்றச்சாட்டுகள் விடுக்கப்பட்டுள்ளன.

தமிழரான மனித உரிமைகள், செயற்பாட்டாளர் ஒருவர் மீது பெற்றோர் நிறைந்த பிளாஸ்டிக் பை மூலம் மூச்சுத் நினைவுக்குட்படுத்தப்பட்டமை, இளம் தமிழ்ப் பெண்ணை கடத்திச் சென்ற பொலிஸார் அப்பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்தி சிகரெட்டால் சுட்டமை, தமிழ் பட்டதாரி ஒருவரை கடத்திச் சென்ற பொலிஸார் அவரை இராணுவ முகாமில் வைத்து சூடாக்கிய உலோக கம்பிகள் மூலம் தாக்கியமை தொடர்பாக வழக்குகளே விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தன.

அதேநேரம் கோட்டாபயவின் நேரடி உத்தரவின் பேரில் மேற்படி சம்பவங்களில் ஈடுபட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரது பெயர்களும் வெளியிடப்பட்டன.

இதில் உயர்மட்ட பொலிஸ் அதிகாரியொருவரும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை