கதிர்காம பாதயாத்திரை புனித யாத்திரையாக்க தீர்மானம்

விரைவில் அமைச்சரவை அங்கீகாரம்

பாரம்பரியமாக வடக்கு, கிழக்கு, மலையகப்பகுதிகளிலிருந்து வருடாந்தம் கதிர்காமத்திற்கு மேற்கொளள்ளப்பட்டுவரும் பாதயாத்திரையை அரசஅங்கீகாரத்துடன் தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்படுமென்று கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையினை திறந்துவைத்துரையாற்றிய தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக மேம்பாடு, இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

காட்டுப்பாதையை திறந்து வைத்தபின் உகந்தமலை முருகனாலய முன்றலில் திறப்புவிழாக்கூட்டம் பாத யாத்திரை சங்க ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நேற்று(27) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

அங்கு அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களான கவி.கோடீஸ்வரன், அ.வேலுகுமார், இந்து கலாசாரதிணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் வெ.ஜெகதீசன், காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ. க.கு.சீதாராம் குருக்கள் ஆசியுரை வழங்கினார்.

அவர் மேலும் பேசுகையில்;

பௌத்தர்கள் புத்தகாயா செல்வது போன்று இஸ்லாமியர்கள் மக்கா செல்வதுபோன்று கிறிஸ்தவர்கள் ரோம் செல்வதுபோன்று இந்துக்கள் சபரிமலை யாத்திரை செல்வதுபோன்று கதிர்காம புனித யாத்திரையும் தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்படும். அதற்கான அமைச்சரவைப்பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன்.

நாளை இந்த மனோ கணேசன் அமைச்சராக இல்லாவிட்டாலும் இங்கு வராவிட்டாலும் இந்த பாதயாத்திரை புனிதமாக தொடர்ந்து பின்பற்றப்பட அரச அங்காரத்தைப்பெற்றிருக்கும்.

அதுபோல் இங்கு இராஜகோபுரத்தின் அவசியத்தை ஆலய பிரதம குரு தனது ஆசியுரையில் வேண்டினார். தூரத்தே வரும்போது இந்தக்கோபுரம் தெரியும்வண்ணம் உயர்ந்ததொரு இராஜகோபுரம் இந்தக்கானகத்தின் மத்தியிலே அமைத்துத்தருவேன்.

இதை நான்செய்யவில்லை. அந்த உகந்தமலை முருகன் சொல்கிறான் இந்த மனோகணேசன் செய்கிறான், அவ்வளவுதான். அந்த இராஜகோபுரம் வானளாவ உயர்ந்து கலங்கரைவிளக்கமாகத் திகழும்.

நாம் எங்களுக்குள் அல்லது வேறினத்தவரின் வேறுபாடுகளைக்கண்டு வேறுபட்டு நிற்கத் துடிக்கிறோம். ஏன் நாம் எமக்குள் உள்ள ஒருமைப்பாடுகளைக்கண்டு ஒற்றுமையாக வாழமுடியாது?

தமிழர் அல்லாதவர்களும் பாதயாத்திரையில் செல்வதாக அரசஅதிபர் இங்கு கூறினார். அந்த அரவணைப்பு அவசியம். நான் ஒருபுறம் இந்துவிவகார அமைச்சர் மறுபுறம் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். சகல இனமும் சமத்துவமாக வாழவேண்டும்.எமது இன மத மொழி உரிமைகள் பேணப்படவேண்டும். மத அடையாளங்கள் அழிக்கப்பட்டால், அந்த மதம் காணாமல் ஆக்கப்பட்டுவிடும். அதற்கு யாரும் அனுமதிக்கக்கூடாது.

எமது மதம், மொழி இருப்பு பாதுகாகக்ப்படவேண்டிய அதேவேளை, ஏனையோருடன் சகோதரத்துவத்தைப் பேணவேண்டும். அவர்களை அரவணைத்துச்செல்லவேண்டும்.

பல்லினத்தன்மையுள்ள நாட்டில் அஃது அவசியம். நாம் எமது இருப்பை மட்டும் பேண முற்படுவோமாகவிருந்தால் சகோதரஇனங்கள் எம்மை வெறுக்கும். அதனால், இருந்ததையும் இழக்கவேண்டிவரும். அதற்காக அரவணைப்பை மட்டும் செய்தால் நாம் காணாமல் ஆக்கப்படுவோம்.

எமது இருப்பை விலைக்கு விற்றால் நிச்சயம் எமதினம் அழிந்துவிடும்.

எனவே, இருப்பைப் பாதுகாக்கும் அதேவேளை, ஏனைய இனங்களை அரவணைத்துச்செல்லவேண்டும்.இரண்டும் சமாந்தரமாகச் செல்லவேண்டும். இன அழிப்பிற்கான சவால்களை உடைத்தெறிந்து முன்னேறவேண்டும். என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை