ஒப்சேர்வர் - மொபிடெல் ஆனந்தக் கல்லூரி வீரர்கள் 9 தடவை வென்றுள்ளனர்

40 ஆண்டுக்காலமாக நடைபெற்றுவரும் ஒப்சேர்வர்- மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை ஆனந்தா கல்லூரி வீரர்கள் 9 தடவை வென்றுள்ளனர். அவர்களில் அர்ஜுன ரணதுங்க (1980-1982) திலான் சமரவீர (1994- 10995) ஆகியோர் இவ்விரண்டு தடவைகள் இந்த விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1979 இல் முதல் தடவையாக ஒப்சேர்வர் விருது வழங்கப்பட்ட போது அதனை வென்றவர் ரோயல் கல்லூரி மாணவரான ரஞ்சன் மடுகல்ல. 1980 இல் இந்த விருதை வென்றவர் முதலாவது அனந்த கல்லூரி மாணவன் அர்ஜுன ரணதுங்க ஆவார். 1981 இல் சென் பீடடர்ஸ் கல்லூரியின் ரொஹான் புல்ஜன்ஸ் ஒப்சேர்வர் விருதை வென்றார். 1982 இல் மீண்டும் அர்ஜுன ரணதுங்கவே ஒப்சேர்வர் விருதை இரண்டாவது தடவையாக வென்றார்.

இதனையடுத்து அர்ஜுனவின் சகோதரரான சஞ்சீவ ரணதுங்க 1988 இலும் மார்வன் அத்தபத்து 1990 இலும் திலான் சமரவீர 1990 மற்றும் 1995 இலும் முத்துமுதலிகே புஷ்பகுமார 1999 இலும் 2007 இல் மலித் குணதிலக்கவும் ஒப்சேர்வர் விருதுகளை வென்றவர்களாவர். 2009 இல் மற்றோரு ஆனந்த வீரரான தினேஷ் சந்திமால் ஒப்சேர்வர் விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.

துஷான் மலித் குணதிலக்க 1987 மார்ச் 29ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் அனந்த கல்லூரிக்காக பல வெற்றிகளை அவர் பெற்றுக்கொடுத்தார். இந்த வெற்றிச் செயற்பாடுகளே அவரை 2007 வருடம் ஒப்சேர்வர்- மொபிடெல் விருதை பெற்றுத் தந்தது. வலது கை துடுப்பாட்ட வீரரான இவர் இடதுகை பந்துவீச்சாளர் ஆவார்.

பதுரலிய விளையாட்டு கழகம் மற்றும் சில்லோ மேரியன்ஸ் ஆகிய கழகங்களுக்காக விளையாடிய மலித் குணதிலக்க இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பபை பெற முடியாமற் போய்விட்டது. முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் கூட இவர் அதிக அளவு விளையாடவில்லை. 22 முதல் தர போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடிந்தது.

குணதிலக்கவின் பாடசாலை கிரிக்கெட் சரித்திரத்தில் 2007 இல் அவர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராக ஒப்சேர்வர் விருதை வென்றது மட்டுமன்றி அவ்வருடத்தின் ஜனரஞ்சகமான வீரர் (வாக்குகள் மூலமான போட்டியில் ) என்ற விருதையும் வென்றமையாகும்.

ஒப்சேர்வர் விருது வழங்கும் நிகழ்வில் ஒரே விழாவில் மேற்படி இரண்டு விருதுகளையும் ஒரே வீரர் வென்றமை அது முதலாவது தடவையாகும். மேற்படி உயர் விருதுகள் இரண்டுடன் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த தலைவர் ஆகிய விருதுகளும் இவர் முக்கிய இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

துடுப்பாட்டத்தில் எந்த நிலையிலும் ஆடக் கூடிய திறமை இவரிடம் இருந்தது. அத்துடன் தேவையான நேரத்தில் சிறப்பாக பந்துவீசும் திறமையும் அவரிடம் இருந்தது.

எனினும் பாடசாலையில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய பின்னர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் உடனடியாக திறமை காட்ட முடியாமல் போனது. அவருக்கு ஏற்பட்ட காயங்களே இதற்குக் காரணமாகும்.

10வயது முதல் குணதிலக்க ஆனந்த கல்லூரிக்காக கிரிக்கெட் விளையாடி வந்தார். 14, 16 வயதுக்குட்பட்ட ஆனந்த அணிக்கு மட்டுமன்றி கல்லூரியின் முதல்தர அணியிலும் தலைவராக வழிநடத்திய குணதிலக்க 2007 ஆம் ஆண்டு உச்சம் தொட்டார். 2007 பருவ காலத்தில் அவர் 600 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தார். இதில் ஒரு சதமும் நான்கு அரைச்சதங்களும் அடங்கின.

ரிச்மன்ட் கல்லூரிக்கு எதிராக அவர் பெற்ற ஆட்டமிழக்காமல் 100 இணர்டாவது இன்னிங்ஸில் 50 என்பதே அவரது பாடசாலை போட்டிகளில் சிறப்பானதாகும். அதே நேரம் சென். ஜோசப்ஸ் கல்லூரிக்கு எதிராக 74 ஓட்டங்கள் மஹிந்த கல்லூரிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 79 ஓட்டங்கள், வெஸ்லி கல்லூரிக்கு எதிராக 51 ஆகியவையே அவர் 2007 இல் பெற்ற ஓட்டங்களாகும். அத்துடன் அந்த வருடம் அவர் பந்துவீச்சில் 90 விக்கெட்டுகளை கைப்பற்றியதும் ஆனந்த கல்லூரி பந்து வீச்சாளர் ஒருவரின் சாதனையாக அமைந்தது.

அவ்வருடம் பந்து வீச்சில் அவர் ரோயல் கல்லூரிக்கு எதிராக 58 ஓட்டங்களுக்கு 13 விக்கட்டுகள் பெற்றார். 47 வருடங்களுக்குப் பிறகு அனந்த கல்லூரி அந்த வருடம் ரோயல் கல்லூரியை தோற்கடித்தது. அதற்கு குணதிலக்கவின் பந்து வீச்சே காரணமாக அமைந்தது. அதேநேரம் சென் பெனடிக்ஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியில் அவர் 32 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை மற்றொரு சிறப்பம்சமாகும். 2007 ஆம் ஆண்டில் அவர் பந்து வீச்சில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் 13 தடவைகள் பெற்றுள்ளார். அத்துடன் மைதானத்தில் எந்த இடத்திலும் சிறப்பான களத்தடுப்பாளராக செயற்பட அவரால் முடிந்தது.

2007 இல் நான்காவது வருடமாக கல்லூரியின் முதல்தர அணியில் விளையாடி வந்த குணதிலக்க ஓல்ட் ஆனந்தியன்ஸ் கழகத்துக்கும் விளையாடி வந்தார். அத்துடன் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாகாண மட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலும் அவர் விளையாடி வந்தார்.

இந்நிலையில் ஒப்சேர்வர் மொபிடெல் விருது வழங்கும் 41 ஆவது விழா இவ்வருட இறுதியில் கோலாகலமாக நடத்தப்படவுள்ளது. அனைத்து பாடசாலை கிரிக்கெட் வீரர்களும் ஒப்சேர்வர் விருதை வெல்வதை மிகவும் பெருமையாகக் கருதி வருகின்றனர். இலங்கை தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் ஒரு படியாகவே ஒப்சேர்வர் விருது இளம்பாடசாலை வீரர்களால் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை