புத்தளம் விம்பிள்டன் கால்பந்தாட்ட கழகம் இறுதி போட்டிக்கு தகுதி

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் புதிய கால்பந்தாட்ட தொடரான, நகர பிதா (சிட்டி பாதர்) வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் புத்தளம் நகரின் அதி சிறந்த அணியான விம்பிள்டன் கால்பந்தாட்ட கழகம் வெற்றிவாகை சூடி இறுதி போட்டிக்கான தகுதியை அடைந்துள்ளது.

மிக குறுகிய கால இடைவெளியில் சிரேஷ்ட அணிகளை தோல்வி அடைய செய்து அரை இறுதிக்குள் பிரவேசித்த புத்தளம் ஒடிடாஸ் அணியினை 05 : 01 கோல்களினால் வெற்றி கொண்டதன் மூலமே விம்பிள்டன் அணியானது இறுதி சுற்றுக்குள் பிரவேசித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள புத்தளம் தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் அணியுடன் விம்பிள்டன் கால்பந்தாட்ட கழகம் பரபரப்பான இறுதி போட்டியில் பங்கெடுக்க உள்ளது.

குறித்த இந்த இரண்டாவது அரை இறுதி ஆட்டம் புத்தளம் மாவட்ட நகர சபை விளையாட்டரங்கு தொகுதியில் சனிக்கிழமை (22) மாலை நடைபெற்றது.

இந்த அரை இறுதி ஆட்டம் மிக சூடு பிடித்த ஒரு ஆட்டமாக அமையலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அனுபவம் பெற்ற விம்பிள்டன் அணியின் ஆட்டத்துக்கு முன்பாக ஒடிடாஸ் அணியினால் ஈடு கொடுக்க முடியாமல் ஆகியது.

இந்த போட்டியில் விம்பிள்டன் அணி தலைவர் எம்.ஜே.எம்.சீஸான் தொடர்ந்து 03 கோல்களை புகுத்தி ஹேட்ரிக் சாதனையை நிலைநாட்டினார். இதேவேளை எம்.ஐ.எம். சபீக், எம்.ஐ.எம். பாக்கீர் ஆகிய சகோதரர்களான இருவரும் தலா ஒவ்வொரு கோல்களை புகுத்தினர்.

போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ.எம். கியாஸ், ஏ.ஓ.அஸாம், எம்.எம்.ஷிபான், எம்.எஸ்.எம். ஜிப்ரி ஆகியோர் கடமையாற்றினர்.

சிறந்த வீரர்களை விருதுகள் வழங்கி உற்சாகப்படுத்தும் விம்பிள்டன் கழகம், இந்த போட்டியில் சிறந்த ஆட்ட நாயகனாக தொடர்ந்து 03 கோல்களை புகுத்தி ஹேட்ரிக் சாதனையை நிலைநாட்டிய வீரர் எம்.ஜே.எம்.சீஸானை தெரிவு செய்து விருது வழங்கி கௌரவித்தது.

புத்தளம் தினகரன் நிருபர்

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை