அமைச்சரவை அங்கீகாரம்பெற்று 26 வருடங்கள் கடந்தும் தமிழருக்கு அநீதி

கல்முனை வடக்கு பிரதேச செயலகம்;

1993 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமை அங்கு வாழும் 46 ஆயிரம் தமிழ் மக்களின் உரிமைக்கு இழைக்கப்படும் அநீதியெனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல வருடங்களாக இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ள

நிலையில், இன்று வரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லையெனக் குறிப்பிட்ட அவர், பாராளுமன்றம் தலையிட்டு அதற்கு உடனடி தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென்றும் சபையில் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய கோடிஸ்வரன் எம்.பி,

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லையென்றும் இந்த பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் விடயத்திலாவது நீதியான தீர்வு ஒன்றை அரசாங்கம் வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

மேற்படி பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி பௌத்த மதத் தலைவர்களும் இந்து மதத் தலைவர்களும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அதில் பௌத்த துறவியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் இந்நிலையில் உடனடியாக அரசாங்கம் நீதியான தீர்வு ஒன்றை இதற்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் பல தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இதன் போது அதற்கு நீதியான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக பிரதமர் தமக்கு உறுதியளித்ததாகவும் கோடிஸ்வரன் எம்.பி தெரிவித்தார்.

கல்முனை நகரம் 95 வீதமான தமிழ் மக்கள் வாழும் பிரதேசம்.மேற்படி பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதில் மத அடிப்படைவாதிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கான உரிமை கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்திலேயே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர் அதற்கு அரசாங்கமும் துணை போவது விந்தையாக உள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவை தரம் உயர்த்துவதற்கு போதுமான அத்தனை வளங்களும் உள்ளன. 234 ஆளணியுடன் 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த செயலகப் பிரிவு அமைந்துள்ளது. இந் நிலையில் இதற்கான காணி மற்றும் நிதி போன்றவை மறுக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் தௌஹீத் ஜமாத் அமைப்பு பள்ளி வாசல்கள் தோறும் இதற்கு எதிராக கோரிக்கைகளை முன்வைத்தது. அதேவேளை, தொடர்ந்து அரசாங்கம் இதனை வழங்காது தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது. இதன் மூலம் தமிழ் மக்களின் நீதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பாராளுமன்றம் இதற்கு தீர்வொன்றைப் பெற்றுத் தரும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சபையில் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம் மகேஸ்வரன் பிரசாத்

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை