புதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500 ரூபாய் வீதம் பணம் அறவீடு

முற்றாக மறுக்கிறார் அமைச்சர்

பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பவில்லையென பணிப்பாளரும் கைவிரிப்பு

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து 500 ரூபா வீதம் அறவிடப்பட்டு வருவதான தகவலை அமைச்சர் தயா கமகே முற்றாக மறுத்தார்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அப்பாவி மக்களிடமிருந்து ஒரு சதத்தையேனும் மீளப் பெற வேண்டிய அவசியம் இல்லையென்றும் இது மோசடியென்றும் அவர் கூறினார்.

புதிய சமுர்த்தி பயனாளிகளின் உரித்துப் பத்திரம் இடும் உறைகள், மேடை தயாரித்தல், அலங்காரங்கள், கதிரைகள் மற்றும் ஏனைய உபகரணங்கள்,உபசரிப்புகள், நடன குழுக்களுக்கான செலவு,பிரசாரம், டீ-சேர்ட்கள் போன்ற செலவுகளை மீளப்பெறுவதாகக் கூறியே இந்நிதி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தினகரன், ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயிடம்

தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இதனை முற்றாக மறுத்ததுடன் இது மோசடியென்றும் இப்பணத்தை சேகரிக்கும் அதிகாரி யாரென்பதை முதலில் கண்டறியுங்கள் என்றும் கூறினார்.

"அத்துடன் புதிதாக சமுர்த்தி பயனாளிகளைத் தெரிந்து அவர்களுக்கு உரித்துப் பத்திரம் கொடுப்பது மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுப்பது யாவும் சமுர்த்தி வங்கிகளின் பொறுப்பிற்குட்பட்டது. இதற்காக சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து ஒரு சதத்தைக்கூட மீளப்பெற வேண்டிய அவசியமில்லை," என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் மஹியங்கணை பிரதேசத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து 1220 ரூபா வீதம் பணம் சேகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து தலா 500 ரூபாவை அறவிட்டு அத்தொகைக்குரிய காசோலையினை மாவட்டச் சமுர்த்தி பொது வைப்புக் கணக்கில் வரவு வைக்குமாறு கிளிநொச்சியிலுள்ள அனைத்து சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் சமுர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் சுற்று நிருபத்துக்கமைய மேற்கொள்ளப்பட்டதென சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டப் பணிப்பாளர் திருமதி ஆ.தவபாலன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ளார். எனினும் திணைக்களப் பணிப்பளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த சுற்றுநிருபத்தை தான் வெளியிடவில்லையென்றும் அதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் அவர் மறுப்புத் தெரிவித்தார். எனினும் அது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் திணைக்களப் பணிப்பாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 13,078 புதிய சமுர்த்தி பயனாளிகளும் 6,539,000 ரூபா பணத்தை சமுர்த்தி வங்கிகளிடமிருந்து மாவட்ட சமுர்த்தி பொது வைப்புக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 06 இலட்சம் பேருக்கு சமுர்த்தி பெற்றுக் கொடுக்கும் நிகழ்வின் முதற்கட்டம் 25 மாவட்டங்களிலும் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக அமைக்கப்பட்ட மேடை மற்றும் கோலாகலமான வைபவத்துக்காக செலவிடப்பட்ட பணம் என்பன புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சமுர்த்தி பயனாளியிடமிருந்தும் தலா 500 ரூபா வீதம் அறவிடப்படுவதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்

 

 

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை