'1990 - சுவசெரிய' அம்பியூலன்ஸ் சேவை கிழக்கில் விஸ்தரிப்பு

'1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை' இலங்கை முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் கலாநிதி ஹர் டி சில்வாவின் தலைமையில் நேற்று அம்பாறையில் இடம்பெற்றது. இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே, பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1990 சுவசெரிய சேவையானது முதன் முதலில் 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டதுடன், தொடர்ந்து ஏனைய மாகாணங்களிலும் அதன் சேவை கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

27 அம்பியூலன்ஸ் வண்டிகள் நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தி அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமது சேவையை ஆரம்பித்துள்ளன.

அதற்கமைய, இந்தச் சேவையானது முழு இலங்கையிலும் தமது சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளதுடன், நாடு பூராகவும் 297 சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுவரை இச்சேவைக்கு வந்த 1,133,344 தொலைப்பேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளித்து 219,371 தடவைகள் அம்பியூலன்ஸ் வண்டிகள் அவ்விடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அம்பியூலன்ஸ் வண்டிகளில் இதுவரை 89 குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை