18, 19 இரத்து செய்ய வேண்டும்

ஜனாதிபதி

19 அரசியல் வீழ்ச்சிக்ேக வித்திட்டது நானும் பிரதமரும் இழுபட்டு திரிவதற்கு 19ஆவது திருத்தமே காரணம்

நாட்டை வீழ்ச்சியிலிருந்து மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தங்கள் இரத்துச்செய்யப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இந்த இரண்டு அரசியலமைப்பு திருத்தங்களுமே காரணமாகியுள்ளன என்பதை சுட்டிக்காட்டினார்.

நாட்டில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியையும் எதிர்காலத்தை ஸ்திரத்தன்மையுடன் கட்டியெழுப்பவும் இது பெரும் உறுதுணையாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நான்கு தசாப்த பூர்த்தியையொட்டிய நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கியவாறே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அதேவேளை, அரசியலமைப்பு க்கான 19ஆவது திருத்தம் நாட்டில் அரசியல் ஸ்தரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்டது.

அது அவரது மன்னர் ஆட்சி முறையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதுவும் நாட்டுக்கு பொருத்தமில்லாதது என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு 19ஆவது அரசியல்

திருத்தமே காரணமாகியுள்ளது. அதனால் தான் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை உருவாகியுள்ளது. 19ஆவது திருத்தம் நடைமுறையில் இல்லாவிட்டால் தற்போதைய அரசாங்கம் சிறப்பானதாக அமைந்திருக்கும். 19ஆவது திருத்தத்தினால் நாம் ஒருதலைவரையும் இழந்துள்ளோம். அதேவேளை 19ஆவது திருத்தம் நாட்டில் அரசியல் வீழ்ச்சிக்கே வித்திட்டுள்ளது.

நாட்டில் தற்போது மக்கள் ஜனாதிபதியாகிய நானும் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்கவும் இருவேறு பக்கங்களில் இழுபட்டு திரிகின்றோம் என்று கூறிவருகின்றனர். இதற்கு காரணமும் 19ஆவது திருத்தம் தான்.

19ஆவது அரசியல் திருத்தத்தினால் இந்த நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு 18 மற்றும் 19ஆவது அரசியல் திருத்தங்கள் செல்லுபடியற்றதாகப்படவேண்டும். 18 இன் மூலம் நாட்டில் ஏகாதிபதியமும் 19 இன் மூலம் நாட்டின் வீழ்ச்சியுமே இடம்பெற்றுள்ளன.

19 இல்லாதிருந்தால் கடந்த காலங்களில் நாட்டிற்கு பெரும் நன்மைகள் ஏற்பட்டிருக்கும். இடம்பெற்றுள்ள தவறுகள் தொடர்பில் நாம் நன்கு அறிவோம். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினர் 19ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனால் நாட்டிற்கு நெருக்கடிகள் ஏற்படுமென்று அதனை தயாரித்த அரசியல் அமைப்பு நிபுணர்கள் ஒருபோதும் கூறவில்லை. தற்போதைய நிலைமைக்கு காரணம் எந்தவொரு நபரினதும் பிரச்சினையல்ல. அரசியல் அமைப்பில் உள்ள பிரச்சினையே.

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினால் ஒரு அரசியல் தலைமையின் கீழ் பயணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதுடன் அரசியல் ஸ்திரமின்மையும் ஏற்பட்டுள்ளது. அதனால் நல்லாட்சி அரசின் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நாட்டு மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளும் மக்கள் மய ஆட்சியே நாட்டுக்கு அவசியமாகவுள்ளது. அரசியல் தலைமைகள் நாட்டை நேசிப்பவர்களாக இருப்பதும் முக்கியமாகும்

நாட்டின் அபிவிருத்திக்கு வலுவான சக்தியாக கருதப்படும் 16 இலட்சம் அரச ஊழியர்கள் ஊழல் மற்றும் மோசடியின்றி தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவார்களேயானால் மக்களின் தேவைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

தேர்தலுக்கு செல்லுவதற்கு இன்னும் நாலரை மாதங்களே உள்ளன. கடந்த நாலரை வருடமாக இந்த அரசாங்கம் சரியாக செயற்பட்டதா? அல்லது தவறாக செயற்பட்டதா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். தவறு நடந்த இடம் எது என்று நாம் தேடிப்பார்க்கவேண்டும். அது தொடர்பில் அதற்கான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.

ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்பி நாட்டின் அனைத்து மக்களையும் முன்னேற்றுவதற்கு நான் தயார். சிலர் நான் வீடமைப்பு நிர்மாண துறை அமைச்சரான சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவு ஆதரவளிப்பதாக கூறப்படுகின்றது. அதற்கு காரணம் அவர் ஓர் ஊழல் அற்ற அரசியல்வாதி என்பதே.

இந்நாட்டின் அரசியல் தலைவர்களை கொல்லாமல் கொல்வதற்கு சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாதாரண மக்களிலிருந்து ஒருவர் முன்னேறி இருந்தால் அவர்களே அவ்வாறே செய்கின்றனர். கொல்வதை விட கொடுமையானது கொல்லாமல் கொல்வதே என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை