முஸ்லிம்களின் சத்தியாக்கிரக போராட்டமும் நேற்று நிறைவு

எமது பிரச்சினைகளை தமிழரும் முஸ்லிம்களுமே பேசி தீர்க்கவேண்டும் - ஹரீஸ்

கல்முனையில் நேற்று (23) நான்காவது நாளாகவும் நடைபெற்ற முஸ்லிம் மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் நண்பகல் 12.00 மணியோடு முடிவுக்கு வந்தது. கல்முனையில் தமிழ் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த

உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த சாத்தியாக்கிரக போராட்ட இடத்திற்கு வருகை தந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்தார்.

தொடர்ந்து இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் , தமிழ் சகோதரர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெற்றிருப்பதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்கள். இதனையடுத்து பொலிஸாரின் தலையீட்டினாலும், அரசினதும் அறிவிப்பை மதித்து அவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவில் சமூகம், பள்ளிவாசல் தலைவர்கள் , அரசியல் பிரதிநிதிகள் அனைவரினதும் ஆலோசனைக்கு அமைய இந்த போராட்டத்தை நாமும் தற்காலிகமாக கைவிடுகிறோம்.

கல்முனையில் தமிழ் - முஸ்லிம் மக்கள் மிக நீண்ட காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்திருக்கிறோம். நாம் ஒருபோதும் அவர்களை மாற்றுக்கண் கொண்டு பார்க்கவில்லை. இந்த கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழ் மக்களை வேறுபடுத்தி பார்த்தது கிடையாது. அபிவிருத்தி என்று வருகின்ற போது அதனை நியாயமாக செய்து கொடுத்திருக்கிறோம். அண்மையில் கல்முனை ஆதார வைத்தியசாலையை அண்டிய பகுதியில் மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவு செய்து தெருவிளக்குகளை பொருத்தியுள்ளோம். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்திக்கிறோம். இங்கு தமிழ் - முஸ்லிம் மக்கள் மிக நேருக்கமாக வாழ்கிற போது மூன்றாம் தரப்பினரை கொண்டு வந்து நியாயமற்ற போராட்டங்களை செய்வது கவலையளிக்கிறது.

எமது பிரச்சினைகளை நாம் ஒன்றாக இருந்து பேசித் தீர்க்க வேண்டும். தொடர்ந்து எமது தமிழ் - முஸ்லிம் உறவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் இதனை சின்னாபின்னப்படுத்தும் விதத்தில் செயற்படும் தீய சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இந்த போராட்டத்தை திசை திருப்பாமலும் ஓர் இனத்திற்கான பிரச்சினையாக அடையாளப்படுத்தாமலும் சுயாதீனமாக செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசேட தூஆப்பிரார்த்தனையுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

 

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை