பாதுகாப்பை கருதி அவசரகால சட்டம் நீடிக்கப்பட வேண்டும்

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவசரகாலச் சட்டம் மேலும் நீடிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்காகக் கொண்டுவரப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னரான நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தினேஷ் குணவர்த்தன எம்.பி இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாடு இந்தளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிலைமையே காரணமாகும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் தெளிவாக குறிப்பிட வேண்டும். அவசரகால சட்டம் செயற்படுத்தப்பட்டுள்ள சூழலில் தேடுதல்கள் மற்றும் கைதுகள் நடைபெறுகின்றன. ஆனால் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென்றே மக்கள் கூறுகின்றனர். பல இடங்களில் சோதனைகள் நடத்தப்படவில்லை, ஆனால் சோதனைகள் ஒரே இடத்திலேயே நடத்தப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி இருக்கின்றபோதும், பொலிஸ்மா அதிபரை அவரால் நீக்க முடியாது. இவரை வீட்டுக்கு அனுப்ப பாராளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளினால் சந்தேக நிலைமையிலேயே மக்கள் இருக்கின்றனர். இதனாலேயே பிள்ளைகள் பாடசாலைகளுக்கு வருவதில்லை. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் தெளிவாக கூற வேண்டும்.

அடுத்த கூட்டத்தின் போது அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டும். இது தொடர்பாக இன்னும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்க விரும்புகின்றோம். பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் வாழ்வை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும். இது தொடர்பான அறிவித்தல் எப்போது அரசாங்கத்தினால் வெளியிடப்படுமென கேட்கின்றேன்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை