தீவிரவாதக் கருத்துகளை ஊக்கப்படுத்தும் பரப்புரைகளுக்கு இடமளிக்க வேண்டாம்

முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சு சகல பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தல்

நாட்டில் எந்தவொரு கூட்டத்திலும், ஜமாஅத்திலும் வெறுப்பூட்டுகின்ற அல்லது தீவிரவாதக் கருத்துகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரப்புரைகளுக்கு இடமளிக்கக் கூடாதென அமைச்சர் ஹலீம், தெரிவித்தார்.

இவ்வாறு செய்வதானது நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை, வக்பு சட்டம், ஐசிசி.ஆர்பி, தண்டனைச் சட்டக்கோவை அவசரகால ஒழுங்கு விதிகள் உள்ளிட்ட பல சட்டங்களின் கீழ் குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளிவாசல்களுக்கு அனுபியுள்ள விசேட சுற்று நிரூபத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச் சுற்றுநிருபத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

முஸ்லிம்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்களின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதச் செயல்களை இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு வன்மையாக கண்டிக்கின்றது. இஸ்லாத்தில் பயங்கரவாத்திற்கோ அல்லது மற்றொரு மனிதனை கொலை செய்வதற்கோ எவ்விதமான அனுமதியும் இல்லை.

இஸ்லாமிய கோட்பாடுகளின்படி, அப்பாவி மனிதனொருவரை கொலைசெய்வதானது முழு மனித சமுதாயத்தையும் கொலைசெய்வதற்கு சமமானதாகும்.

முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் தரும நம்பிக்கைப் பொறுப்புகள் அல்லது வக்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக, பள்ளிவாசல், நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் தங்களது குறிப்பிட்ட மஸ்ஜித்களின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்திற்கு முழுமையான பொறுப்புடையவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையில், முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு, பள்ளிவாசல்களின் அனைத்து நம்பிக்கை பொறுப்பாளர்களுக்கும் பின்வரும் விடயங்கள் தொடர்பில் பணிப்புரைகளை வழங்குகின்றது. எந்தவொரு கூட்டத்திற்கும்/ஜமாஅத்திற்கும் எவ்விதத்திலுமான பெறுப்பூட்டுகின்ற அல்லது தீவரவாதமுள்ள கருத்துகளை ஊக்கப்படுத்துவதற்கோ அல்லது பரப்புவதற்கோ இடமளிக்காதிருத்தல் அல்லது அனுமதியளிக்காதிருத்தல் வேண்டும். இவ்வாறு செய்வதானது நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை, வக்பு சட்டம், ஐசிசிஆர்பி, தண்டனைச்சட்டக் கோவை அவசரகால ஒழுங்கு விதிகள் உள்ளிட்ட பல சட்டங்களின் கீழ் முழுமையான பொறுப்பை கொண்டிருப்பதற்கு ஏதுவாக அமையும்.

நம்பிக்கைப்பொறுப்பாளர்கள் தமது மஸ்ஜித்களில் இடம்பெறும் அனைத்து ஜும்ஆ உரைகள் மற்றும் ஏனைய உரைகளையும் ஒலிப்பதிவுசெய்து, அவற்றை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பூரண ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கவும்.

இதன் பிரகாரம், நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை அங்கத்தவர்கள் முழுமையான பொறுப்புடனும் கவனத்துடனும் செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர். எமது சமூகத்தினுள்ளும் ஏனைய சமூகங்களுக்கு மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு உங்களது அலுவலகங்களை பயன்படுத்தும் படியும் உங்களை வேண்டுகின்றோம்.

ஏனைய மத நம்பிக்கை சார்ந்த மதகுருக்களையும் சமயப் பிரமுகர்களையும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்யும்படி அழைத்து சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த விடயங்களை முஸ்லிம்களுடன் பகிர்ந்துகொள்ளவும் நாம் உங்களை ஊக்குவிக்கின்றோம்.

 

 

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை