விமான நிலையத்தில் பயணிகள் நலன்கருதி அதி உச்ச பாதுகாப்பு

விமான சேவைகளில் எவ்வித பாதிப்புமில்லை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலையடுத்து விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகளுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ள போதும் விமானங்களின் சேவைகளில் பாதிப்போ, தாமதமோ ஏற்படவில்லையென ஸ்ரீலங்கா விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க நேற்று தெரிவித்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக பயணிகள் தற்காலிகமாக இந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி நேரிடுகின்றமை குறித்து தான் பயணிகளிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வழமையாக விமான நிலையத்துக்கு பயணிகள் வருபோது 3 மணி நேரத்துக்கு முன் வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். எனினும் தற்போதைய பாதுகாப்பு நிலை காரணமாக 4 மணி நேரத்துக்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்துக்கு வெளியே உள்நுழையும் பாதைகளிலுள்ள பாதுகாப்பு நடைமுறையில் தாமதம் ஏற்படலாம் என்ற காரணத்தினாலேயே 4 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்துக்குள் வரும் பயணிகளின் பொதிகள் சோதனையிடுவதற்கான ஸ்கேன் இயந்திரங்கள் அனைத்தும் நல்ல நிலையிலேயே உள்ளன. பொறியியலாளர்களின் உதவியுடன் அவற்றை பயணிகளின் வசதிகருதி புறப்படுகை பகுதியின் முன் பக்கமாக கொண்டு வந்துள்ளோம்.

இதேபோன்று எதிர்காலத்தில் ஸ்கேன் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்படும் என்றும் தம்மிக்க ரணதுங்க தெரிவித்தார்.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் முடிந்தவரை தமது உறவினர்களை அழைத்து வருவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெளிநாடு செல்வதற்காக வரும் பயணிகளின் வசதி கருதி சொகுசு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து சிறிது தூரம் நடந்து சென்று புறப்படுகை பகுதிக்கு செல்ல முடியும்.

இதேபோன்று வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விசேட இலவச போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. சொந்த வாகனங்களில் வருபவர்களும் தமது வாகனத்தை உள்ளே எடுத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கென தனியான வழிப்பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு விமானப்படை, இராணுவம், பொலிஸ், விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரின் கடமைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கே.அசோக்குமார்

 

 

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை