முடிதுறக்கிறார் ஜப்பான் பேரரசர்

ஜப்பான் பேரரசர் அகிஹிடோ தனது பதவியை துறக்க தயாராகியுள்ளார். 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் ஜப்பான் பேரரசர் ஒருவர் பதவி துறப்பது இது முதல் முறையாகும்.

பேரரசர் முடிதுறக்கும் தனிப்பட்ட சடங்குகள் டோக்கியோ இம்பீரியல் மாளிகையில் நேற்று ஆரம்பமானது. தனது வயது மற்றும் உடல்நிலை காரணமாக தனது பணியை பூர்த்திசெய்ய முடியாது என்று 85 வயதான பேரரசர் குறிப்பிட்டிருந்தார். “என் வயதின் காரணமாக என்னால் தினசரி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. என் உடல்நிலை நலிந்து வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார். இந்த அறிவிப்பு அரசரின் மீது பரிவை உண்டாக்கி உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அவரது மகனான முடிக்குரிய இளவரசர் நருஹிடோ புதிய பேரரசராக முடிசூடப்பட்டு, புதிய யுகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜப்பானில் அரசருக்கு எந்த அரசியல் அதிகாரமும் இல்லை என்றாலும், தேசத்தின் அடையாளமாக அவர் உள்ளார்.

59 வயதான நருஹிடோ 126 ஆவது ஜப்பான் பேரரசராக அரியணை ஏறவுள்ளார். ஜப்பானின் புதிய ரெய்வா யுகத்தையும் இந்த மாற்றம் ஆரம்பித்துவைக்கும்.

ஜப்பானிய பேரரசரின் முடிதுறப்பு விழா அவர்களது புராண கால சம்பிரதாயங்களின் அடிப்படையில் பல்வேறுவிதமான சடங்குகளை அடிப்படையாகக் கொண்டது. அந்த முறைகளில் எதுவும் வழுவாது தற்போதைய மன்னரின் முடிதுறப்பு விழா அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஜப்பானிய அரண்மனையில் மன்னரின் அரசவையாக இயங்கி வந்த மட்சு நோ ம எனும் அறையில் நடைபெறுவதாக அரச குடும்பத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசருடன் ஜப்பானிய அரசி மிகிகோவும் பங்கேற்றுள்ளார்.

அரசரும், அரசியும் தங்களது 330 உதவியாளர்களுடன் அரசவையில் பிரசன்னமளித்து பேரரசராக அகிஹிட்டோ தனது இறுதி உரையை வழங்கி ஜப்பானிய பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களின் படி முடி துறப்பதுடன் இந்நிகழ்வு நிறைவடையும்.

நேற்று மாலையே முடிதுறப்பு நிகழ்வு முடிவடைந்து விட்டாலும் கூட சூரியகாந்தி மகுடம் மன்னர் அகிஹிட்டோவின் தலையை நேற்று நள்ளிரவு வரை அலங்கரிக்கும்.

பின் மீண்டும் மறுநாளான இன்று காலை முடிக்குரிய இளவரசரான நருஹிட்டோ மன்னராக முடிசூட்டப்பட்டு அரச குடும்பத்தின் சொத்துக்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்படும். அது முதல் ஜப்பானின் அதிகாரப்பூர்வ அடுத்த அரசராக நருஹிட்டோ செயல்படுவார்.

Wed, 05/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை