இலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியது இந்தியா

இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத்தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான தகவலை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று  (28)  வெளியிட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல்  2 1 ஆம் திகதி   இலங்கையிலுள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்திருந்ததோடு,   500 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இந்தியர்கள் உட்படபல வெளிநாட்டவர்களும்உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து,   இலங்கைக்கு செல்வதை மறு அறிவித்தல் வரை தவிர்த்துக்கொள்ளுமாறு சர்வதேச நாடுகள் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தன.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.  தற்போது இலங்கையில் 99 வீதம் பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை தான் உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்கும் தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதேவேளை, வெளிநாட்டு தூதுவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்ததோடு, இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீக்குமாறு பிரதமர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பின்னணியில், இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை இந்தியா நேற்று தளர்த்தியது.

எனினும், இந்திய பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்யும்போது, மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியா பிரஜைகளுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படுமாயின், அது தொடர்பில் அறிந்துகொள்வதற்கும், உதவிகளை நாடுவதற்கும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 0094-772234176, 0094-777902082, 0094-112422788 மற்றும் 0094-112422789 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Wed, 05/29/2019 - 13:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை