விசாரணைகளில் பாரிய முன்னேற்றம்

படையினரின் துரித செயற்பாட்டால் இயல்புநிலை வழமைக்கு திரும்பியது

* ஊரடங்கு முற்றாக நீக்கம்

* சர்வதேச பயங்கரவாதம் வேறுவடிவில் ஊடுருவதை தடுக்கவும் திட்டம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டாலும் சர்வதேச பயங்கரவாதம் வேறு வழிகளில் நாட்டுக்குள் புகுவதைத் தடுக்க சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டியிருப்பதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையிலிருந்து சென்று சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிபெற்ற நபர்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறான நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னரான நிலைமைகள் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றும் போதே பிரதமர் இந்தத் தகவல்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் குறிப்பிடுகையில்,

நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலும் அதன் பின்னரான விசாரணை செயற்பாடுகள் குறித்தும் பாராளுமன்றத்துக்கு நான் விளக்கமளித்துள்ளேன். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுடன், தாக்குதல்களினால் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்கும் செயற்பாடுகளிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவதற்குப் பாதுகாப்புத் தரப்பினரால் முடிந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட இன்னமும் உயிருடன் இருக்கும் அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளனர். குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்தவர்களை விசாரணை செய்து அவர்களைக் கைதுசெய்வதே எஞ்சியுள்ளது. தராதரம் பாராது அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பொலிஸாரும், முப்படையினரும் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அதற்கும் அப்பால் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபரிடம் நான் அறிக்கையொன்றையும் பெற்றுள்ளேன். இதனைச் சபைக்கு முன்வைக்க விரும்புகின்றேன். மே மாதம் 6ஆம் திகதி காலை 8 மணி முதல் 7ஆம் திகதி 8 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பொலிஸ்மா அதிபர் பதில் வழங்கியுள்ளார். இதற்கமைய பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், இதனை தடுக்கும் வகையிலான எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. மதஸ்தலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறாவிட்டாலும் நாளாந்த வழிபாடுகள் இடம்பெறுவதுடன், வியாபாரா நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. பயணிகள் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது. நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதுடன், வீதித் தடைகள் அதிகரிக்கப்பட்டு சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என பதில் பொலிஸ்மா அதிபர் அனுப்பியுள்ள பதிலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் சில கருத்துக்களைக் கூறவேண்டியுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற இலங்கையர்கள் பற்றிப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஐ.எஸ் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி இஸ்லாமிய இராச்சியத்தைப் பிரகடனப்படுத்தி முஸ்லிம்களை சிரியாவுக்கும், ஈராக்குக்கும் வருமாறு அழைப்பு விடுத்தார். இதனையேற்று இலங்கையிலிருந்தும் துருக்கியின் ஊடாக சிலர் சிரியா சென்றுள்ளனர். வெளிநாடுகளிலிருந்த இலங்கையர்கள் இவ்வாறு சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிபெற்று நாடு திரும்பிய நபர்கள் பற்றிய எந்தப் புலனாய்வுத் தகவல்களும் இல்லை. எனினும், சிரியாவுக்குச் சென்று பயிற்சி பெற்ற சிலர் பற்றிய தகவல்கள் உள்ளன. இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் மாத்திரமன்றிப் பொலிஸார் மற்றும் முப்படையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிம் சாதிக் ஹக் என்பவர் 2014ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சென்று ஆயுதப் பயிற்சி பெற்றுத் திரும்பியிருப்பதாகவும், தெஹிவளையில் குண்டுத் தாக்குதலை நடத்திய லதீப் மொஹமட் ஜமீல் என்பவர் ஐ.எஸ் அமைப்புடன் இணைவதற்காக 2014ஆம் ஆண்டு சிரியாவுக்குச் செல்ல துருக்கிச் சென்றிருப்பதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து உயிரிழந்த முதலாவது இலங்கையர் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிரியா சென்றிருப்பதுடன் அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். இவரின் பெற்றோர் 2016ஆம் ஆண்டு நாடு திரும்பியுள்ளனர். அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு 8 குழுக்களை விசாரணைகளில் ஈடுபடுத்தியிருப்பதுடன், தலைவர் உயிரிழந்ததால் புதிய தலைவராக நியமிக்கப்பட இருந்தார் என நம்பப்படும் மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌபர் என்ற நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர 52 பேரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அதேநேரம் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நஷ்ட ஈட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை உயிரிழந்த 102 பேரின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களில் 42 பேருக்கும் ஆரம்ப கட்டமான நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த தேவாலயங்கள் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரால் புனரமைக்கப்படுவதுடன் இதற்கான ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளோம்.

சாதாரண வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். நேற்றையதினம் (நேற்று முன்தினம்) பாடசாலைகளை மீள ஆரம்பித்திருப்பதுடன், இது தொடர்பில் கல்வி அமைச்சரிடமிருந்து அறிக்கையொன்றைப் பெற்றிருந்தேன். முதலாவது நாள் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் படிப்படியாக நிலைமைகள் சுமுக நிலைக்கு வந்துள்ளன.

குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டாலும் வேறு வழியில் இந்த சர்வதேச பயங்கரவாதம் மீண்டும் நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் இதனை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளுடன் இணைந்த செயற்படவேண்டியுள்ளது.

புலனாய்வுத் தகவல்களை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதுடன், தொழில்நுட்ப ரீதியான உதவிகளை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் சட்டத்தைப் பலப்படுத்தி குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

 

 

 

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை