பாதுகாப்புக்கு உத்தரவாதம்; புதிய மூலோபாயங்கள் வகுப்பு

முப்படைத்தளபதிகள், பதில் பொலிஸ் மாஅதிபர் கூட்டாக அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் தேசியப் பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பொறிமுறைகள் ஊடாக நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலப் பாதுகாப்புக்கான அனைத்து மூலோபாயங்களும் வகுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமும், பீதியும் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட மற்றும் பொலிஸ் மாஅதிபர், முப்படைத் தளபதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு வலியுறுத்தினர்.

இங்கு கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட, சம்பவம் இடம்பெற்ற நாளிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினர் என அனைவரும் தேசியப் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கான பாதுகாப்புப் பொறிமுறை கிரமமான முறையில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டை பாதுகாப்பது பாதுகாப்புப் படையினர் தான். ஆகவே, வேறு நபர்களின் கருத்துகளுக்கும், உண்மைக்கு புறம்பான தகவல்களுக்கும் மக்கள் ஏமாற்றமடைய அல்லது குழப்பமடைய வேண்டாம். மிகவும் நம்பிக்கையுடன் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணித்து வருகின்றோம்.

நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து எவரும் கருத்துகளை முன்வைக்க வேண்டாமென பொறுப்புணர்வுடன் வலியுறுத்த விரும்புகின்றேன். பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் அச்சமடைய வேண்டியதில்லை.

அனைத்துப் பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரும், பொலிஸாரும் ஒருங்கிணைத்து தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் ஊடாக பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.

இங்கு கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனநாயக்க,

சம்பவம் நடைபெற்ற நாள் முதல் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு இராணுவத்தினருடன் இணைந்து முப்படையினரும், பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து முலோபாயங்களும் வகுக்கப்பட்டுள்ளன. அவசரகாலச் சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு அவசியமான போதிய அதிகாரங்களை அரசு பெற்றுக்கொடுத்துள்ளது. நாட்டின் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை முப்படையினர் உறுதி செய்துள்ளதுடன், இரவு பகல் பாராது கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தை மேற்கொண்டவர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அனைத்து தீவிரவாதிகளையும் சட்டத்தின் மூலம் தண்டிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். அவசியமற்ற பீதியை ஏற்றுபடுத்திக்கொள்ள வேண்டாமென மக்களிடம் கோருகின்றோம். பொய்யான பிரசாரங்களுக்கு அச்சம் கொள்ளவும் வேண்டாம்.

மூன்று தசாப்தகாலமாக இந்த நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை அடியோடு அழித்த உங்களது இராணுவத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். மக்களை மீண்டும் முழுமையாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைப்பதே எமது பரமார்த்தமாகும் என்றார்.

கடற்டைத் தளபதி றியர் அட்மிரல் பியல் டீ சில்வா கருத்து வெளியிடுகையில், நாட்டில் உள்ள சகல துறைமுகங்களினதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்குள் எந்தவொரு சட்டவிரோத சக்தியும் அத்துமீறி பிரவேசிக்க முடியாது என்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி இங்கு கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை