ஹொங்கொங் பாராளுமன்றில் உறுப்பினர்கள் கைகலப்பு

சந்தேக நபர்களை விசாரணைக்கு சீனாவுக்கு அனுப்ப அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டுவரும் திட்டத்தின்போது ஹொங்கொங் பாராளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை கைகலப்பு ஏற்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் காயமடைந்தனர். கேரி பேன் எனும் உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேசைகள் மீது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஏறியும், எதிர்த்தரப்பினரை கடுமையாகப் பேசியும் அவைத்தலைவரின் ஒலிவாங்கியைக் கட்டுப்படுத்தவும் முயன்ற சூழலில் கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சட்டத்திருத்தம் ஹொங்கொங் சுதந்திரமாக இயங்குவதற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த கைகலப்பு மூண்டது.

இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் முயற்சியாக, ஹொங்கொங் ஜனநாயகத்துக்கு ஆதரவான அவைத்தலைவர் மாற்றப்பட்டு, சீனாவுக்கு ஆதரவான ஒருவர் அப்பதவிக்குக் கொண்டுவரப்பட்டார்.

1997ஆம் ஆண்டு வரை ஹொங்கொங் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் சீனாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது முதல் 50 ஆண்டுகளுக்கு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகள் மட்டுமே சீனாவின் வசம் கொடுக்கப்பட்டு, ‘ஒரே நாடு, இரு அமைப்புமுறை’ என்னும் கொள்கையின் அடிப்படையில் ஹொங்கொங் தன்னாட்சி அதிகாரங்கள் மிக்க பிராந்தியமாக உள்ளது.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை