இந்தோனேசிய தேர்தல் முடிவுகளை எதிர்த்து 2ஆவது நாளாக கலவரம்

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கலவரம் இரண்டாவது நாளாக நேற்று தொடர்ந்த நிலையில், ஜனநாயகத்தைக் குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ எச்சரித்துள்ளார்.

முழுமையான பாதுகாப்புக் கவசங்களை அணிந்தவண்ணம் பொலிஸார் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். கற்கள், பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது வீசியதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 17ஆம் திகதி நடந்த இந்தோனேசிய பொதுத் தேர்தலில் விடோடோ 55.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இவ்வாரம் அறிவித்திருந்தது.

விடோடோவுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோற்ற முன்னைய இராணுவத் தலைவர் பிரபோவோ சுப்பியாண்டோ, தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து பிரபோவோவின் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் கும்பல்கள் ஜகார்த்தாவின் பல்வேறு பகுதிகளில் பொதுச்சொத்தை நாசப்படுத்தி வருகின்றனர்.

எனினும் தமது ஆதரவாளர்களை வீடுகளுக்கு திரும்பும்படி சுப்பியாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

கலவரத்தில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்திருப்பதோடு 200 பேர் காயமடைந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தோனேசியாவின் பாதுகாப்பு, ஜனநாயகம், ஒற்றுமை ஆகியவற்றுக்குக் கெடுதல் விளைவிக்கும் எவரையும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்று விடோடோ எச்சரித்துள்ளார். சட்டத்தின்படி பொலிஸாரும் இராணுவத்தினரும் இதனைக் கையாளப்போவதாக அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சுகார்த்தோ 1998ஆம் ஆண்டில் பதவியில் இருந்தபோது நிலவிய பதற்றமான சூழலுக்கு நிகரான நிலையை ஜகார்த்தா இப்போது எதிர்நோக்குவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, இந்தோனேசியாவில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சமூக ஊடகங்களை அந்நாடு ஓரளவுக்கு முடக்கியுள்ளது.

சினமூட்டும் செயல்களைத் தவிர்க்கவும் சமூகத்தில் பொய்யான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும் சமூக ஊடகத்தில் சில அம்சங்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் என்று தலைமைப் பாதுகாப்பு அமைச்சர் விராந்தோ தெரிவித்தார்.

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை