சார்கோஸ் தீவுகளை கைவிட பிரிட்டனை வலியுறுத்தும் ஐ.நா

சார்கோஸ் தீவுகளை மொரிசியஸ் நாட்டுக்கு பிரட்டன் திரும்பக் கொடுக்கக் கோரும் தீர்மானம் ஒன்று ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் அமைந்துள்ள பொதுச்சபையில் இடம்பெற்ற ஏற்கும் கடப்பாடு அற்ற வாக்கெடுப்பில் 116 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததோடு 6 நாடுகள் மாத்திரமே எதிர்த்து வாக்களித்தன.

ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் உட்பட 56 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டன.

பிரிட்டனின் கடல் கடந்த நிலப்பகுதியாக இந்திய சமுத்திரத்தின் தீவுக் கூட்டங்களை 1965இல் சுதந்திரம் பெறுவதற்கு பகரமாக பிரிட்டனுக்கு வலுக்கட்டாயமாக விட்டுக்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாக மொரிசியஸ் குறிப்பிடுகிறது.

எனினும் இந்தத் தீவுகள் மீதான மொரிசியஸின் இறைமையை பிரிட்டன் ஏற்காது என்று பிரிட்டனின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பிரட்டனுக்கு எதிரான இந்த வாக்கெடுப்பில் பிரிட்டனுடன் அமெரிக்கா, ஹங்கேரி, இஸ்ரேல், அவுஸ்திரேலியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளே எதிர்த்து வாக்களித்துள்ளன.

இந்த தீவுகளில் இருந்து முடியுமான விரைவில் வெளியேறும்படி பிரிட்டனுக்கு ஐ.நாவின் உயர் நீதிமன்றம் அறிவுறத்தி இருக்கும் நிலையிலேயே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

மொரிசியஸிடம் இருந்து 1965 ஆம் ஆண்டு 3 மில்லியன் பெளண்ட்களுக்கு சார்கோஸ் தீவுக் கூட்டத்தை வாங்கிய பிரிட்டன் அங்கு பிரட்டிஷ் இந்திய சமுத்திர பிரதேசம் என்ற பிராந்தியத்தை உருவாக்கியது.

1967 மற்றும் 1973 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தீவுகளின் மொத்த மக்களும் வெளியேற்றப்பட்டு அமெரிக்காவுடனான கூட்டு இராணுவத் தளமாக மாற்றப்பட்டது. டிகோ கா்சியாவில் அது தொடர்ந்து இருந்து வருகிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான குண்டுத் தாக்குதல்களுக்கு விமானங்கள் அனுப்பப்படும் தளமாக இது செயற்பட்டது. இந்தத் தளம் அமெரிக உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் பயங்கரவாத சந்தேக நபர்களை விசாரிக்கும் தளமாகவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு இந்த தளத்தின் குத்தகைக் காலம் 2036 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டது.

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை