சமுர்த்தியாளரை இணைக்கும் தேசிய நிகழ்வுக்கு ரூ.180 மில். செலவு

வீண் விரயம் என  ஜே.வி.பி குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 6 இலட்சம் சமுர்த்தி பயனாளிகளை இணைக்கும் தேசிய நிகழ்வில் மேடைக்கு மாத்திரம் 42 இலட்சம் ரூபாவை அரசாங்கம் மதிப்பீடு செய்திருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியது.

இதை விடவும் பிராந்திய ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் மேடைகளுக்கு மாத்திரம் 10 இலட்சம் ரூபா செலவுசெய்யவுள்ளனர். இது தொடர்பான நிகழ்வுகளுக்கு மொத்தம் 180 மில்லியன் ரூபா செலவுசெய்யப்படுவது வீண்விரயமானது என ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஆறு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு

வழங்கப்படுவதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனினும், இதனை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கே வீண் செலவு செய்யப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் தேசிய நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி அமைச்சரின் ஊரான அம்பாறையில் நடைபெறுகிறது. இது தவிரவும் 12 பிராந்திய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்காக 180 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவுசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரீஷேர்ட்டுக்களை தயாரிப்பதற்கு 7 இலட்சம் ரூபாவை செலவு செய்துள்ளனர்.

பயனாளிகளுக்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றின் அச்சுச் செலவு போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பயனாளி ஒருவருக்கு தலா 300 ரூபா செலவுசெய்ய வேண்டியிருப்பதாக சமூக பாதுகாப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிகழ்வுக்காக செலவுசெய்யும் பணத்தை சமூக பாதுகாப்பு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு சமூக பாதுகாப்பு சபைக்கு போடப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சான்றிதழ் அச்சிடுவது போன்வற்றுக்கான பணத்தை சமுர்த்தி வங்கியிலிருந்து எடுக்குமாறும் ஏனைய பணத்தை நிதியத்திலிருந்து எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு நிதியம் என்பது சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து மாதாந்தம் பெறப்படும் 100 ரூபாவைக் கொண்ட நிதியமாகும். இதில் 14 கோடி ரூபா பணம் வருடாந்தம் பெறப்படும். இந்தப் பணத்தைக் கொண்டே அரசாங்கம் வீண்விரயமாக செலவுசெய்கிறது.

நாடு ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்பைச் சந்தித்திருக்கும் சூழ்நிலையில் அரசாங்கம் வீணான செலவுகளைச் செய்து மக்கள் மீது மேலும் சுமைகளைச் சுமத்துகிறது என்றார்.

 

மகேஸ்வரன் பிரசாத்

 

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை