அமெரிக்காவில் கோட்டாவுக்கு எதிராக இருவேறு வழக்குகள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கவும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழர் ஒருவரும் இந்த இரண்டு வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பில் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட ரோய் சமாதானம் என்பர் சார்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டமும், அமெரிக்க சட்ட அமைப்பொன்றும் இணைந்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இதுதவிர, தனது தந்தையின் படுகொலைக்கு கோட்டாபயவே காரணம் எனக் கூறி லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க  வழக்குத் தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை நடத்தப்பட்டு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என அந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. அஹிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்த வழக்கைத்தொடர்ந்து தற்பொழுது அமெரிக்காவிலிருக்கும் கோட்டாபயவுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. கலிபோர்னியாவில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றுக்குச் சென்றிருந்த கோட்டாபயவைத் தேடிச்சென்று அழைப்பாணை கையளிக்கப்பட்டிருப்பதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேநேரம், யஸ்மின் சூக்கா பணிப்பாளராகவிருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டமும் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அதற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் வெற்றிபெற்ற ரோய் சமாதானம் என்பவர் சார்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டமும், நீதிச்சேவை நிறுவனமொன்றும் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

தற்போது கனடா பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள ரோய் சமாதானம், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் கோட்டாபயவே அதற்குப் பொறுப்பானவர் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பிரஜாவுரிமையை கைவிட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சிக்கிறார். பொறுப்புக் கூறல் தொடர்பில் அவரிடம் விசாரணை செய்வதற்கு கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார். ரோய் போன்று சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் இந்த வழக்கில் இணைந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை