தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை

வெளியானது சுற்று நிருபம்

தரம் 5 மாணவர்கள் இனிமேல் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற ​வேண்டிய கட்டாயம் இல்லையென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.

இவ்வருடம் முதல் இப்பரீட்சை கட்டாயம் இல்லையெனக் கூறும் 08/2019 ஆம் இலக்க சுற்றறிக்கையையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெற்றோரின் திறமையுடைய பிள்ளைகளை முன்னணி பாடசாலைகளில் தரம் 06 இற்கு தெரிவு செய்யும் நோக்கிலேயே இதுவரைக்காலமும் தரம் 05 இல் புலமைப்பரிசில் பரீ்ட்சை நடத்தப்பட்டு வந்தது.

எனினும் இப்பரீட்சையினால் சிறுவர்கள் பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாவதால் இப்பரீட்சை அவர்களுக்கு பெரும் சுமையாகியிருப்பதனை சிறுவர்களுக்கான மனநல வைத்தியர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

இப்பரீட்சையினால் அநேகமான சந்தர்ப்பங்களில் குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பிள்ளைகளிலும் பார்க்க முன்னணி பாடசாலைகளில் கற்கும் மாணவர்களே பாரிய மனஅழுத்தத்துக்கு உள்ளாகிவருதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றை கவனத்திற் கொண்ட அமைச்சர் எதிர்காலத்தில் புலமைப்பரிசில் பெற்றுக் கொள்ள தகுதியுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேரந்த மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கு இப்பரீட்சை கட்டாயமல்ல என வலியுறுத்தியுள்ளார். இப்பரீட்சையை காரணம்காட்டி மாணவர்களுக்கு எவ்வகையிலும் அழுத்தம் கொடுக்கக் கூடாதெனக் கூறியுள்ள கல்வியமைச்சர், இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 08/2019 என்ற சுற்றரிக்கையையும் வெளியிட்டு வைத்துள்ளார்.

இதற்கமைய மாணவர்கள் தரம் 05 இல் தமது பெற்றோரின் விருப்பத்துக்கமைய புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதா அல்லது இல்லையா என்ற தீர்மானத்தை மேற்கொள்ள முடியுமென்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தரம் 05 உடன் முடிவடையும் பாலர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றாதவிடத்து தரம் 06 இல் கல்வி கற்பதற்காக அம்மாணவருக்கு அதே பிரதேசத்திலுள்ள இன்னுமொரு பாடசாலையில் அனுமதியளிப்பதற்கான உரிமை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உண்டு என்றும் அந்த சுற்றரிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்களிடையே போட்டி நிலையை உருவாக்கும் வகையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்களைக் கொண்ட போஸ்டர்கள், கட்டவுட்களை வெளியிடுவதற்கும் இச்சுற்றரிக்கையூடாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானமானது சித்தியடைந்தோர் மற்றும் சித்தியடையாதோர் என்ற பாகுபாட்டினை சிறு வயது முதலே பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தக்கூடாதென்பதற்காகவே முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தரம் 06 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும்போது வசதிகள் மற்றும் சேவைக் கட்டணம், பாடசாலை அபிவிருத்திக் குழு கட்டணம் ஆகிய அனுமதிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்ந்த ஏனைய எவ்வித கட்டணங்கள், நன்கொடைகள் மற்றும் பரிசுப் பொருட்களை பெற்றோரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாதென்றும் இந்த சுற்றரிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை தரம் 06 இல் சேர்த்துக் கொள்ளும்போது மேற்படி கட்டணங்கள் அறவிடப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே கல்வியமைச்சு இத்தீர்மானத்தை எட்டியுள்ளது.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையினால் சிறுவர்கள் பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையடுத்து இப்பரீட்சையின் அவசியம் குறித்து மீளாய்வு செய்யுமாறு நியமிக்கப்பட்ட சிறுவர் மனநல வைத்தியர்கள் குழு முன்வைத்த சிபாரிசுகளுக்கமையவே கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இப்பரீட்சை மாணவர்களுக்கு கட்டாயமல்ல என்ற தீர்மானத்துக்கு வந்திருப்பதாகவும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை தடை செய்யுமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இக்குழு சிபாரிசு முன்வைக்கவில்லையென்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 லக்ஷ்மி பரசுராமன் 

 

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை