போலியான தகவல்களை பரப்புவோருக்கு சிறைத்தண்டனை

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, தவறான பிரசாரங்கள் மற்றும் போலியான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய ஊடக நிலையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே, அந்நிலையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, நாட்டின் பல பாகங்களிலும் தவறான தகவல்கள் பரவியமையினால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி நேரிட்டது. 

எனவே இணையத்தளங்கள், பேஸ்புக், ருவிட்டர், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து கடுமையான நடவடிக்கைகளை எடுப்பர்

இவ்வாறு போலியான தகவல்கள் பரப்பப்படும் பட்சத்தில், பொதுமக்கள் மத்தியில் தொந்தரவுகளையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதோடு, பாதுகாப்பு படையினரும் தவறாக வழிநடத்தப்படுவதற்கு சாத்தியம் காணப்படுகின்றது. ஆகையால், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும்  பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

போலியான தகவல் பரப்பும் நபருக்கு எதிராக சட்ட ஒழுங்கு விதிகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறித்த நபருக்கு 3 முதல் 5 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 04/26/2019 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை