உக்ரைன் ஜனாதிபதியாக நகைச்சுவை நடிகர் தேர்வு

உக்ரைன் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டு பிரபல நகைச்சுவை நடிகர் வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி பெரு வெற்றி பெற்றுள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய அரசியலுக்கு புதிதான 41 வயது ஜெல்லன்ஸ்கி, 70 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை வென்றுள்ளார்.

ஜெல்லன்ஸ்கியை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ பொரொசென்கோ தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த முடிவுகள் பெட்ரோவுக்கு மட்டுமின்றி அவர் முன்னிறுத்திய திட்டங்களுக்கு கிடைத்த பேரிடியாக பார்க்கப்படுகிறது.

“நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்று ஞாயிற்றுக்கிழமையன்று வெளிவந்த வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு பின்னர் நடந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜெல்லன்ஸ்கி மக்களிடையே கூறினார்.

“நான் இன்னும் அதிகாரபூர்வமாக ஜனாதிபதியாகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் - ‘எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது’ என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

உக்ரைனின் தொலைக்காட்சி நகைச்சுவை தொடர் ஒன்றில் நடித்த ஜெல்லன்ஸ்கி, திடீரென அந்நாட்டின் ஜனாதிபதியாவது போன்ற காட்சிகள் இருந்தன. அது தற்போது உண்மையாகியுள்ளது.

உக்ரைனை பொறுத்தவரை பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் அந்நாட்டின் ஜனாதிபதிக்கே அதிகாரம் உள்ளது.

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை