கட்டுப்பாடற்ற விலைகளில் அரிசி விற்பனை

புத்தாண்டை முன்னிட்டு அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் பேச்சுகளை முன்னெடுத்திருந்த போதிலும் இதுவரை அது சாத்தியப்படவில்லை என்பதுடன், சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாடற்ற விதத்தில் காணப்படுகிறது.  

ஒரு கிலோ சம்பாவை 85ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறும் ஒரு கிலோ நாட்டரிசியை 75ரூபா என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டவாறும் விநியோகிக்க நெல் ஆலை உரிமையாளர்களிடம் அரசாங்கம் அண்மையில் பேச்சுகள் நடத்தியிருந்த போதிலும் அதில் எவ்வித இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கவில்லை.  

இக்கலந்துரையாடலில் துறைசார் அமைச்சர் பீ.ஹரிசன், ஒரு கிலோ நெல்லின் விலையின் இருமடங்கு விலைக்கு அரிசியை விநியோகிப்பது தொடர்பில் யோசனையை முன்வைத்திருந்தார். இதன் பிரகாரம் ஒரு கிலோ சம்பா நெல் 41ரூபாவிற்கும் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், புத்தாண்டும் நெருங்கிவிட்ட நிலையில் இதுவரை அரிசிக்கு எவ்வித கட்டுப்பாட்டு விலையும் நிர்ணயிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் லங்கா சதொசவில்கூட நாட்டரசி ஒரு கிலோவின் விலை 79ரூபாவாக காணப்படுவதுடன், சம்பா அரிசி ஒரு கிலோ 85ரூபாவாக காணப்படுகிறது. அரிசிக்கானக் கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதா? என்று பாவனையாளர் அலுவலகர் அதிகார சபையிடம் “தினகரன்” பத்திரிகை வினவிய போது, அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்த போதும் இதுவரை அவ்வாறு கட்டுப்பாட்டு விலைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை எனக் கூறியது.  

புறக்கோட்டை உட்பட நாட்டின் பல பாகங்களிலும் 80ரூபாவிற்கு அதிகமாக நாட்டரசி விற்பனை செய்யப்படுவதுடன், சம்பா அரிசி ஒரு கிலோவின் ஆகக் குறைந்த விலையாக 85ரூபா காணப்படுகிறது. 85ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறும் சம்பா அரிசியை விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கம் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கலந்துரையாடல் நடத்தியிருந்த போதும் 85ரூபாவே ஆகக் குறைந்த விலையாகக் காணப்படுகிறது.  

வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ள சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாக காணப்படுவதால் புத்தாண்டு என்பது வழமை போன்ற ஒருநாளாகவே தமக்கு உள்ளதென புறக்கோட்டை சந்தைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வந்திருந்த சில வாடிக்கையாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.  

அரிசி விலை மிகவும் உயர்வாக உள்ளமைக்கு காரணம் என்னவென வியாபாரிகளிடம் வினவிய போது, சந்தையில் நெல் விலை உயர்வாக காணப்படுவதால் குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாதென பதிலளித்தனர்.  

வாழ்க்கைச் செலவும் பெருமளவு உயர்வடைந்துள்ள நிலையில் அரிசிக்கு கட்டுப்பாடு விலையொன்றை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டுமென்பது பொது மக்களின் பிரதானக் கோரிக்கையாகவுள்ளது.

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)

Fri, 04/12/2019 - 08:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை