நீதி நிலைநாட்டப்படுவதற்கு எதிரானோரே நல்லிணக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பு

நாட்டில் நீதிநிலைநாட்டப்படக்கூடாது என்று விரும்புபவர்களே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வெற்றியாளர்களுக்கான நீதியையே அவர்கள் எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்கள் உயிர்வாழ்வதற்கான அமைதியைவிடுத்து கல்லறைகளுக்கான அமைதியையே விரும்புகின்றனர். தேவையற்ற அச்சம், உணர்வு மற்றும் வெறுப்புக்களை மக்கள் மீது திணித்து அதிகாரத்தை தமது பக்கம் இழுத்துக் கொள்ள இவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய பிரேரணை மற்றும் அதனை மையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் அரசியல் பிரசாரங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மங்கள சமரவீர நேற்றையதினம் நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30/1 பிரேரணை நிறைவேற்றப்பட்டபோது வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றியவன் என்ற ரீதியில் தற்பொழுது மக்களைக் குழப்பும் வகையில் வெளியிடப்படும் போலியான செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கு அனுப்பப்பட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழு தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தவறானவை. சிறந்த அனுபவம் உள்ளவர்களும், ஜெனீவாவுக்கான தூதுவரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தார். ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அரசாங்கத்தையோ அல்லது நாட்டையோ சங்கடப்படுத்தும் வகையில் செயற்படவில்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபெற்றுமுடிந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடரில் இராஜதந்திரத்தின் முதிர்ச்சியை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் நம்பிக்கையொன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், எமது பங்குதாரர்களும், நட்பு நாடுகளும் இறைமையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லிணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் பயணம் பற்றி உலகுக்குத் தெரியப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக 40வது கூட்டத்தொடர் அமைந்தது. இவ்வாறான நிலையில் உண்மையான நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதுடன், கருணைமிக்கதாக அவை அமைய வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணை மற்றும் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 34/1 பிரேரணையைப் போன்றதொரு பிரேரணையாகும். இந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டபோது வெளிவிவகார அமைச்சின் தற்போதைய செயலாளரே ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்த வதிவிடப்பிரதிநிதியாகவிருந்தார். இவ்வாறான நிலையில் தற்போதுள்ள நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாதுகாப்புத் தரப்பினரையும், நாட்டையும் காட்டிக் கொடுத்துவிட்டார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.

நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் மனோ தித்தவல, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸீஸூக்கு, பிரேரணையில் இணை அனுசரணை வழங்கி ஒப்பமிடுமாறு கேட்டுக் கொண்டார். நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைக்கும் செயலகம் அமைச்சரவையின் அனுமதி பெற்று பிரதமரின் கீழ் அமைக்கப்பட்டதொரு நிறுவனமாகும். இவ்வாறான நிலையில் அஸீஸூக்கு வழங்கப்பட்ட பணிப்புரை தொடர்பில் அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு முழுமையாகத் தெரியும் என்பதுடன், இந்தப் பிரேரணைதொடர்பான விடயங்களை மனோ தித்தலவவுடன் இணைந்து முன்னெடுக்குமாறு அமைச்சர் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கவுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் நாட்டில் நீதி நிலைநாட்டப்படக்கூடாது விரும்புபவர்களே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வெற்றியாளர்களுக்கான நீதியையே அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை