அரச சேவையில் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

அரசாங்க சேவைகளில் இரண்டுமொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமையளிக்கவுள்ளோம். தமிழ் மொழி பேசுபவர்களுக்காக வழங்கப்படும். 111 நியமனங்களுக்கும் மேலதிகமாக இந்த அரசாங்கம் 135 பேருக்கு நியமனங்களை வழங்கியுள்ளதென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது-

தற்போது சேவையிலுள்ள சிங்கள உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியும் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழியும் பயிற்றுவிக்கின்றோம். அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக கொழும்பிலும் களனியிலும் வீடமைப்புத் தொகுதிகளை அமைத்து வருகின்றோம். இவ்வருடம் அதன் நிர்மாணப்பணிகள் முடிவுக்கு கொண்டு வரப்படும். மொனராகலையிலும் நான்கு மாடி வீடமைப்புத் தொகுதியொன்றை அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக அமைத்து வருகின்றோம்.

நாம் ஓய்வூதியக்காரர்களை கைவிடவில்லை. அவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 12 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளோம். பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கவுள்ளோம். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வௌ்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கியுள்ளோம்.

கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.மு எம்.பி சுசில் பிரேமஜயந்த

காலத்துடன் பதவிகளின் பெயர்களும் தகைமைகளும் மாறுபட்டு செல்கின்றன. சில பதவிகள் இல்லாமல் போயுள்ளன. மேலும் பல பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சட்டக் கல்லுரி மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படல் வேண்டும். நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். மத்திய வங்கி பிணை முறி மோசடியே இந்த நாட்டில் இடம்பெற்ற மிகப் பெரிய மோசடியாகும்.

களுத்துறை மாவட்ட ஜே.வி.பி எம்.பி நளிந்த ஜயதிஸ்ச

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நாளை பெய்யும்மழையை பற்றி மட்டுமா எதிர்வுகூறும். அனர்த்தங்களை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்கான வசதிகள் எமது நாட்டில் ஏன் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.

நிர்வாக சேவை பரீட்சைக்கான வயதெல்லை 28 என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பிரச்சினைக் காரணமாக தமது கல்வி நடவடிக்கைகளை முடிக்க முடியாமல்போன திறமையான மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றமுடியாத நிலை உருவாகின்றது. இதனால் இப்பரீட்சைக்கான வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப் பொருட்களை கைப்பற்றி அழித்தால் மட்டும் போதாது. அதற்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். அதற்காக அவர்கள் புனர்வாழ்வளிக்க வேண்டும்.

இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க எம்.பி ஹேசா வித்தானகே

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படுகின்றபோதும் அவர்களுக்கு அங்கே சென்று அமருவதற்கு கதிரை இல்லை. சுமார் 15 இலட்சம் அரசாங்க உத்தியோகர்கள் தற்போது நாட்டில் உள்ளனர். அனைவருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் நாம் அதனை எந்நேரமும் கூறித் திரிவதில்லை.

மதூஷ் போன்ற குற்றவாளிகள் இந்நாட்டில் ஏனைய அனைத்து குற்றவாளிகளப் போலவா நடத்தப்படுவார்கள் என்பதை நான் நீதி அமைச்சரிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அதேபொன்று கடந்த அரசாங்கத்தில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடவடிக்ைக எடுக்கப்பட வேண்டும்.

கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.மு எம்.பி உதய கம்மன்பில...

பசிக்காக தங்க மாலையை பறித்த குற்றச்சாட்டின்பேரில் சிறைக்கு செல்வபரும் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக சிறைக்கு செல்பவரும் ஒரே கூண்டில் இருக்கும் நிலையே எமது நாட்டில் இருக்கிறது. இது மிகவும் பாரதூரமானது. இதனால் பசிக்காக திருடியவர் மிகப்பெரிய குற்றவாளியாகவே சிறையிலிருந்து வெளியே வருகின்றார். இந்நிலை மாற்றம் அடைய வேண்டும்.

சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தனித்தனியே சிறை வைக்கப்படல் வேண்டும். சிறைச்சாலைகள் புனரமைப்பு நிலையங்களாக உருவாக்கப்படல் வேண்டும் அல்லது அவை குற்றவாளிகளை உருவாக்கும் இடமாக மாறிவிடும்.

போதைப்பொருள் கடத்தல் காரர்கள் கணவனின்றி குழந்தைகளுடன் தனியாக தவிக்கும் இளம் தாய்மாரை வைத்து தமது வியாபாரத்தை இலகுவாக முன்னெடுத்துச்செல்கின்றனர். பொருளாதார ரீதியாக பாதுகாப்பு பலப்படுத்தப்படுமாயின் எவரும் இதுபோன்ற விடயங்களுடன் தொடர்புபடும் நிலை உருவாகாது.

கம்பஹா மாவட்ட ஐ.தே.க எம்.பி காவிந்த ஜயவர்தன....

இந்நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போமென 2015 ஆம் ஆண்டில் நாம் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம். அதனை நாம் முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.துபாயில் வைத்து மதுஷூடன் கைது செய்யப்பட்ட அவருடைய சகாக்கள் ஒவ்வொருவராக நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். அவ்வாறானவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைந்து கொண்டால் நாடு பாரிய அபாயத்தை சந்திக்க நேரிடும். எனவே இவர்கள் மீண்டும் நாட்டுக்குள் வருவது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட எம்.பி வி.யோகேஸ்வரன்

வாழைச்சேனை நீதிமன்றக் கட்டிடத் தொகுதி விஸ்தரிக்கப்பட வேண்டும். அக்கட்டிடத் தொகுதிக்கு போதிய வளங்கள் வழங்கப்பட வேண்டும். கட்டிடத்தை விஸ்தரிப்பதற்காக நீதிமன்றத்துக்கு முன்னாள் காணியொன்று வழங்கப்பட்டுள்ளபோதும் அக்காணியில் இன்னும் எவ்வித கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அத்துடன் வாழைச்சேனைக்கென சமாதான நீதவான் மற்றும் மரண விசாரணை அதிகாரிகள் இல்லாமை பெரும் குறைபாடாகும். அதேபோன்று வாகரை, செங்கலடி பிர​தேசங்களுக்கும் மரண விசாரணை அதிகாரியொருவர் இல்லாமையினால் அப்பகுதி மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். கொக்கட்டிச்சோலைக்கென நிரந்தர நீதிமன்றம் ஒன்று இல்லை. ஒவ்வொரு அரசாங்கத்தாலும் அரசியல் கைதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இந்த அரசாங்கமாயினும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி உதவிகள் வழங்கப்படல் வேண்டும். அவை காலம் தாழ்த்தி கிடைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய குளங்கள் புனரமைப்பு செய்யப்படல் வேண்டும். தீயணைப்புக் கருவிகள் மற்றும் குழாய் நீர் வசதிகள் அப்பகுதி மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும்.

பதுளை மாவட்ட ஐ.​தே.க எம்.பி அரவிந்த குமார்

இலங்கையில் மிகச் சிறந்த நிர்வாகச் சேவை கட்டமைப்புண்டு. இதனை நாம் வரவேற்கின்றோம். என்றாலும் அரசாங்க சேவையை பெற்றுக் கொள்ளச் செல்லும் மக்களுடைய வேலைகள் இழுத்தடிக்கப்படுவது நல்ல விடயமல்ல. நிருவாகச் சேவை மக்களை திருப்திபடுத்துவதாக அமைய வேண்டுமே தவிர பிறர் எவரையும் திருப்தி படுத்துவதாக இருக்கக்கூடாது.

சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்கின்றபோதிலும் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தமிழ் மொழியில் சேவையை பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது.நுவரெலியாவில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுகின்றது. அம்மாவட்டத்துக்கு 200 இற்கு மேற்பட்ட கிராமசேவை உத்தியோகத்தர்கள் தேவைப்பட்டபோதும் சுமார் 150 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றுள் 08 பேர் மட்டுமே தமிழ் பேசுபவர்கள். அதேபோன்று பதுளையில் 100 இற்கு மேற்பட்ட கிராமசேவை உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றபோதிலும் 119 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதில் மூவர் மட்டுமே தமிழ் பேசுபவர்கள். தமிழ் மொழி தெரிந்தவர்கள் இந்நியமனங்களின்போது புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவே நாம் நினைக்க வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலை எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அமைச்சர் அஜித். பி பெரேரா:

எமது நாட்டின் நீதிமன்ற செயற்பாடுகள் நவீன டிஜிட்டல் முறை மூலம் செயல்படுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக மேம்பாட்டிற்கும் அது பெரும் முன்னேற்றகரமானதாக அமையும்.

மலேசியா போன்ற நாடுகள் நவீன டிஜிட்டல் முறையை உபயோகித்தலில் முன்னிலை வக்கிக்கும்நாடுகளாக உள்ளன. அங்கு வழக்குகள் விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக சிவில் வழக்குகள் 12 மாதங்களில் முடிவுக்கு வருகின்றன. இதனால் அத்தகைய நாடுகளில் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கும் அது உதவியாக அமைந்துள்ளது. எமது நீதிமன்ற முறைமையை முழுமையான டிஜிட்டல் முறையாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். இதற்கு அவசியமான நிதி அமைச்சிடம் இல்லாவிட்டால் திறைசேரியில் இருந்து அதை பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதமர் வழி செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை